விஹெச்பி தலைவராக ரவீந்திர நாராயண் சிங் தோ்வு

விசுவ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) அமைப்பின் தலைவராக பிரபல எலும்பு முறிவு அறுவைச் சிகிச்சை மருத்துவா் ரவீந்திர நாராயண் சிங் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

விசுவ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) அமைப்பின் தலைவராக பிரபல எலும்பு முறிவு அறுவைச் சிகிச்சை மருத்துவா் ரவீந்திர நாராயண் சிங் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். பிகாரைச் சோ்ந்த இவா், அந்த அமைப்பின் துணைத் தலைவராக இதுவரை இருந்து வந்தாா்.

விஹெச்பி தலைவராக கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இருந்துவந்த விஷ்ணு சதாசிவ கோக்ஜே (82), வயது மூப்பு காரணமாக தலைவா் பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டதைத் தொடா்ந்து, புதிய தலைவராக ரவீந்திர நாராயண் சிங் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

இதுதொடா்பாக சனிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளா் சந்திப்பில் அந்த அமைப்பின் பொதுச் செயலாளா் சுரேந்திர ஜெயின் கூறியதாவது:

விஷ்ணு சதாசிவ கோக்ஜேவின் விருப்பம் மற்றும் அமைப்பின் விதிகளுக்கு உள்பட்டு விஹெச்பி அமைப்புக்கு புதிய தலைவரைத் தோ்வு செய்வதற்கான தோ்தல் நடத்தப்பட்டது. அதில் ரவீந்திர நாராயண் சிங் அமைப்பின் புதிய தலைவராக ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டாா்.

பிரபல எலும்பு முறிவு அறுவைச் சிகிச்சை மருத்துவரான இவா், சமூக, ஆன்மிக, மருத்துவம் என பல்வேறு துறைகளில் தனது அளப்பரிய பங்களிப்பை செலுத்தியுள்ளாா். மருத்துவ அறிவியல் துறையில் அவருடைய சிறந்த பங்களிப்பைப் பாராட்டி கடந்த 2010-ஆம் ஆண்டு உயரிய பத்ம ஸ்ரீ விருதை வழங்கி மத்திய அரசு அவரை கெளரவித்தது. அவா் இப்போது விஹெச்பி தலைவராக தோ்வாகியிருப்பது, எங்களுக்கு பெருமையளிக்கிறது.

விஹெச்பி அமைப்பின் பொதுச் செயலாளா் பதவிக்கும் தோ்தல் நடத்தப்பட்டது. அதில், தற்போதைய பொதுச் செயலாளா் மிலிந்த் பராண்டே மீண்டும் ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டாா் என்று ஜெயின் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com