வேளாண் சட்டங்களை அரசு விலக்கிக் கொள்ளும் என்ற அறிவிப்பு எதைக் குறிக்கிறது? -  ப.சிதம்பரம் விளக்கம்

பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் அச்சத்தின் காரணமாகவே வேளாண் சட்டங்களை திரும்பப் பெறப்போவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார் என்று ப. சிதம்பரம் கூறியுள்ளார்
வேளாண் சட்டங்களை அரசு விலக்கிக் கொள்ளும் என்ற அறிவிப்பு எதைக் குறிக்கிறது? -  ப.சிதம்பரம் விளக்கம்
Published on
Updated on
1 min read

பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் அச்சத்தின் காரணமாகவே, வேளாண் சட்டங்களை திரும்பப் பெறப்போவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார் என்று ப. சிதம்பரம் கூறியுள்ளார். 

மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் விவசாயிகள், கடந்த ஒரு ஆண்டாக நாட்டின் தலைநகர் தில்லியில் போராடி வருகின்றனர். 

இந்நிலையில், குருநானக் ஜெயந்தியையொட்டி, நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப்போவதாக அறிவித்தார். 

இதையடுத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் தங்களது கருத்தை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்திருப்பதாவது:  
 
விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்குச் செவி மடுக்காத அரசு எதிர்வரும் 5 மாநிலத் தேர்தல்களில் தோல்வி ஏற்படும் என்று அஞ்சி இந்த முடிவை எடுத்திருக்கிறது.

இந்த முடிவின் பொருள் பாஜக அரசு தன்னுடைய தவறை உணர்ந்து கொண்டது என்பதல்ல, பிரதமருக்கு உண்மையான மனமாற்றம் ஏற்பட்டது என்பதல்ல. 

இடைத் தேர்தல் தோல்வி 
இடைத் தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்த பிறகு பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்தார்களே, அது போலத்தான் இந்த முடிவும்.

மக்கள் உணர வேண்டும்  
ஒரு மாதத்துக்கு முன்னர் வரை வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடுபவர்கள் தேச விரோதிகள் என்று பாஜக விமர்சித்தது. இப்போது திடீரென இந்த முடிவை எடுக்க தேர்தலைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும். எனவே மக்கள் குரலை விட தேர்தல் தோல்வி அச்சமே பாஜக அரசின் போக்கை மாற்றும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

விவசாயிகள் புத்திசாலிகள்
மூன்று வேளாண் சட்டங்களையும் எதிர்த்துப் போராடிய விவசாயிகள் புத்திசாலிகள். அவர்கள் ஒருபோதும் தங்களின் போராட்ட களத்தில் அரசியல் தலைவர்களை அனுமதிக்கவில்லை. போராட்டத்துக்கு அரசியல் சாயம் பூசப்பட்டுவிடக் கூடாது என்பதில் விவசாயிகள் உறுதியாக இருந்தனர். அந்த உறுதியான சாதுர்யத்தால் மட்டும் இந்தப் போராட்டம் ஓராண்டை நெருங்க முடிந்தது. அதனால் அவர்களின் போராட்டத்திற்கு இன்று வெற்றி கிடைத்துள்ளது. அவர்களுக்கு எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com