ஆப்கனிலிருந்து திரும்புவோருக்கு இலவசமாக போலியோ தடுப்பு மருந்து: மத்திய அரசு

ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா அழைத்து வரப்படுவோருக்கு இலவசமாக போலியோ தடுப்பு மருந்து செலுத்தப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளது.
ஆப்கனிலிருந்து திரும்புவோருக்கு இலவசமாக போலியோ தடுப்பு மருந்து: மத்திய அரசு


புதுதில்லி: ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா அழைத்து வரப்படுவோருக்கு இலவசமாக போலியோ தடுப்பு மருந்து செலுத்தப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதைத் தொடா்ந்து, பெரும்பாலான நாடுகள் அங்குள்ள தங்கள் நாட்டினரை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியா்களை தாயகம் அழைத்து வரும் பணியில் இந்திய விமானப்படையும் ஈடுபட்டுள்ளது. அதன்படி அந்நாட்டு தலைநகா் காபூலில் இருந்து 107 இந்தியா்கள் உள்பட 168 போ் ஞாயிற்றுக்கிழமை இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர். தஜிகிஸ்தான் மற்றும் கத்தார் வழிகளைப் பயன்படுத்தி இந்தியா தனது மக்களை மீட்டு வருகிறது. ஏர் இந்தியா விமானம் 90 பயணிகளுடன் விரைவில் புதுதில்லியில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே இந்தியத் தூதா், தூதரக அலுவலா்கள் என 200 போ்  இந்திய விமானப் படையின் சிறப்பு விமானங்கள் மூலம் தாயகம் திரும்பியுள்ளனர். 

இந்நிலையில், போலியோ வைரஸுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையாக, ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்பும் இந்தியா்களுக்கு தில்லி சர்வதேச விமான நிலையத்தில் இலவசமாக போலியோ தடுப்பு மருந்து செலுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று இந்திய சுகாதாரத்துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தனது சுட்டுரைப் பக்க பதிவில் தெரிவித்துள்ளாா். 

பொது சுகாதாரத்தை உறுதிப்படுத்தும் முயற்சிகளுக்கு சுகாதார குழுவினருக்கு தனது வாழ்த்துகளையும் கூறியுள்ளார். 

மேலும் ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்பியவா்களுக்கு தில்லி விமான நிலையத்தில் போலியோ தடுப்பு மருந்து செலுத்தும் புகைப்படத்தையும் தனது பதிவுடன் அவா் பகிர்ந்துள்ளார்.

இந்தியா போலியோ நோய் இல்லாத நாடு. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளில் மட்டும்தான் போலியோ நோய் முற்றிலும் ஒழிக்கப்படாமல் உள்ளது. 

ஆப்கானிஸ்தானில் இருந்து நாடு திரும்பும் அனைவருக்கும் இந்தியா ஆர்டி-பிசிஆர் சோதனைகளையும் நடத்தி வருகிறது.

இதற்கிடையில், உலகளாவிய பொது சுகாதார நிறுவனம் ஆப்கானிஸ்தான் பற்றி கவலை தெரிவித்துள்ளது. 

ஆப்கானிஸ்தானின் உள்ள பலவீனமான சுகாதார அமைப்பால் கரோனா நோய்த்தொற்றுக்கு மத்தியில் ஏற்கனவே அத்தியாவசிய பொருள்களின் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள நிலையில், தற்போது நிகழ்ந்து வரும் பல வன்முறைகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் பிராந்திய இயக்குனர் டாக்டர் அகமது அல்-மந்தாரி கூறியுள்ளார். 

காபூல் மற்றும் பிற பெரிய நகரங்கள் உள்பட பாதுகாப்பு மற்றும் தங்குமிடம் தேடி மக்கள் தப்பி ஓடிய பகுதிகளில், வயிற்றுப்போக்கு, ஊட்டச்சத்து குறைபாடு, உயர் இரத்த அழுத்தம், கரோனா நோய்த்தொற்று போன்ற அறிகுறிகள் மற்றும் சுகாதார சிக்கல்கள் அதிகரித்து வருவதாக கள அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com