ஹிந்து யார், ஹிந்துத்வவாதி யார்? மோடியைக் குறிவைக்கும் ராகுல்

பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் வகையில் ஹிந்து மற்றும் ஹிந்துத்வவாதிக்கு இடையிலான வேறுபாடு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதியில் சனிக்கிழமை விளக்கமளித்தார்.
ஹிந்து யார், ஹிந்துத்வவாதி யார்? மோடியைக் குறிவைக்கும் ராகுல்


பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் வகையில் ஹிந்து மற்றும் ஹிந்துத்வவாதிக்கு இடையிலான வேறுபாடு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதியில் சனிக்கிழமை விளக்கமளித்தார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 2019 மக்களவைத் தேர்தலில் அமேதி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த பிறகு இரண்டாவது முறையாக சனிக்கிழமை அங்கு சென்றார்.

அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசியது:

"நாட்டில் ஹிந்து மதம் குறித்து நிறைய பேசப்படுகிறது. ஹிந்து மற்றும் ஹிந்துத்வவாதிக்கு இடையிலான போராட்டம்தான் இன்று இந்தியாவில் உள்ளது.

ஒருபக்கம் ஹிந்துக்கள், உண்மைப் பாதையைத் தேர்ந்தெடுப்பர். இன்னொரு பக்கம் ஹிந்துத்வவாதிகள் வெறுப்பைப் பரப்பி அதிகாரத்தைப் பிடிக்க என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். ஹிந்துத்வவாதி கங்கையில் தனியாக நீராடுவான். அதுவே ஒரு ஹிந்து கங்கையில் கோடிக்கணக்கானவர்களுடன் நீராடுவான்.

ஒரு ஹிந்து உண்மையைக் கண்டறிந்து, புரிந்துகொண்டு, உண்மைக்காகப் போராடுவதற்காகவே தனது வாழ்நாளை செலவிடுவான். ஹிந்து தனது அச்சத்தை எதிர்கொள்வான். அதை வெறுப்பாகவோ, கோபமாகவோ அல்லது வன்முறையாகவோ மாற்ற மாட்டான். 

அதுவே ஒரு ஹிந்துத்வவாதி பொய் அரசியலில் ஈடுபடுவான். உண்மைக்கும் அவனுக்கும் சம்பந்தம் இல்லை. அதிகாரத்தைக் கைப்பற்ற பொய்யைப் பயன்படுத்துவான். 

நரேந்திர மோடி தன்னை ஹிந்து என்கிறார். அவர் என்றைக்கு உண்மையைப் பாதுகாத்திருக்கிறார். அவர் ஹிந்துவா ஹிந்துத்வவாதியா?"

அமேதி மக்களவைத் தொகுதியின் எம்.பி.யாக ராகுல் காந்தி 15 ஆண்டுகள் இருந்தார். 2019 மக்களவைத் தேர்தலில் பாஜகவின் ஸ்மிருதி இரானியிடம் 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்தத் தோல்விக்குப் பிறகு இரண்டாவது முறையாக அவர் அமேதி தொகுதிக்கு வந்திருக்கிறார். அமேதி மக்களவைத் தொகுதியிலுள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுள் அமேதி, ஜெகதீஷ்பூர், சலோன் மற்றும் திலோய் ஆகிய 4 தொகுதிகள் பாஜக வசம் உள்ளது. கௌரிகன்ஜ் தொகுதி சமாஜவாதி வசம் உள்ளது. வரவிருக்கும் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் அமேதி தொகுதியை மீண்டும் கைப்பற்ற காங்கிரஸ் முயற்சித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com