அஸ்ஸாம்-மிஸோரம் எல்லை விவகாரம்: இரு தரப்பு மோதலில் அஸ்ஸாம் காவலர்கள் 5 பேர் பலி

அஸ்ஸாம் - மிஸோரம் மாநிலங்களிடையே எல்லை விவகாரம் தொடர்பாக இரு தரப்பினரிடையே திங்கள்கிழமை ஏற்பட்ட மோதலில் அஸ்ஸாம் காவலர்கள் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 
கோப்புப் படம்
கோப்புப் படம்


புது தில்லி: அஸ்ஸாம் - மிஸோரம் மாநிலங்களிடையே எல்லை விவகாரம் தொடர்பாக இரு தரப்பினரிடையே திங்கள்கிழமை ஏற்பட்ட மோதலில் அஸ்ஸாம் காவலர்கள் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

இரு மாநில எல்லையில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையே, இரு மாநில முதல்வர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திங்கள்கிழமை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு சுமுக உடன்பாட்டை எட்டுமாறு கேட்டுக்கொண்டார்.

அஸ்ஸாம் - மிஸோரம் மாநிலங்களிடையே கடந்த ஜூன் மாதம் இறுதியில் எல்லைப் பிரச்னை மீண்டும் எழுந்தது. மிஸோரம் மாநிலம் கொலாசிப் மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதியை அஸ்ஸாம் காவல்துறையினர் ஆக்கிரமித்துள்ளதாக கடந்த ஜூன் 30-ஆம் தேதி மிஸோரம் அதிகாரிகள் குற்றம்சாட்டினர். 

அதுபோல, அஸ்ஸாம் மாநிலம் ஹைலகண்டி பகுதிக்கு உள்பட்ட 10 கிலோ மீட்டர் பகுதியை மிஸோரம் ஆக்கிரமித்துள்ளதாக அஸ்ஸாம் அதிகாரிகளும் எம்எல்ஏக்களும் குற்றம்சாட்டினர்.

எல்லைப் பிரச்னைக்குத் தீர்வு காண இரு மாநில அதிகாரிகளும் பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தினர். ஆனால், முன்னேற்றம் ஏற்படவில்லை. 
மிஸோரம் பகுதியிலிருந்து வெளியேற அஸ்ஸாம் காவல்துறையினர் மறுத்துவிட்டதாக புகார் எழுந்தது. மேலும், எல்லைப் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையையும் அஸ்ஸாம் காவல்துறையினர் மேற்கொண்டனர்.

இதனால், ஆத்திரமடைந்த மிஸோரம் எல்லை கிராம மக்கள் காவல்துறையினர் மற்றும் அஸ்ஸாம் எல்லை கிராம மக்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு, அஸ்ஸாம் மாநில கச்சார் மாவட்டத்தில் உள்ள லைலாபூர் கிராமத்தில் 20 -க்கும் மேற்பட்ட குடிசைகள் மற்றும் கடைகளுக்கு கடந்த சனிக்கிழமை தீ வைத்தனர். இதனால், இரு தரப்பிலும் ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறி, கடந்த இரண்டு நாள்களாக மோதல் தொடர்ந்து வருகிறது. இதில் பலர் படுகாயமடைந்ததோடு, உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இந்தக் கலவரத்தில் அஸ்ஸாம் காவலர்கள் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். முன்னதாக இந்தக் கலவரத்தில் 6 பேர் பலியானதாக அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "எல்லை மோதலில் அஸ்ஸாம் காவலர்கள் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். அவர்களுடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

இந்தக் கலவரத்தில், கச்சார் காவல் கண்காணிப்பாளர் உள்பட 50-க்கும் மேற்பட்ட காவலர்கள் படுகாயமடைந்துள்ளனர் என்று அஸ்ஸாம் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இரு மாநில முதல்வர்களுடன் அமித் ஷா ஆலோசனை
அஸ்ஸாம் மற்றும் மிஸோரம் மாநில முதல்வர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திங்கள்கிழமை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு எல்லைப் பிரச்னைக்கு இரு மாநிலங்களும் சுமுக உடன்பாட்டை எட்டுமாறு கேட்டுக்கொண்டதாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com