
மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ
இந்திய விமான படை தினத்தை முன்னிட்டு, சுகோய் 30 போர் விமானத்தில் சென்றபோது எடுக்கப்பட்ட விடியோவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூ சமூகவலைதளத்தில், "இந்திய விமானப்படை தளபதி விடுத்த அழைப்பின் பேரில், சுகோய் 30 போர் விமானத்தில் சென்றபோது கிடைத்த மறக்கமுடியாத பறக்கும் தருணத்தை இந்திய விமான படை நாளன்று நினைவுகூர்கிறேன்.
அப்போது, துணிச்சல் மிகு வீரர்களுடன் கலந்துரையாடினேன். இந்திய விமான படையின் துணிச்சலை கண்டு நாடே தலைவணங்குகிறது" என பதிவிட்டுள்ளார்.
போர் விமானத்தில் பயணிக்கும்போது உடுத்தப்படும் (ராணுவ உடை) ஜம்ப்சூட்டை அணிந்தவாரு வரும் ரிஜிஜூ, போர் விமானத்தில் செல்ல தயாராவது போன்று விடியோவில் பதிவாகியுள்ளது. பின்னர், அதிவேக ஜெட் விமானத்தில் பயணிக்கிறார். இறுதியாக, இந்திய விமானப்படை அலுவலர்களிடம் கலந்துரையாடிகிறார்.
சுகோய் போர் விமானம் 56,800 அடி உயரத்தில் ஒரு மணி நேரத்திற்கு 2,100 கிமீ வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது. கடந்த 2016ஆம் ஆண்டு, மே 18ஆம் தேதி, பஞ்சாபில் உள்ள ஹல்வாரா விமான தளத்திலிருந்த விமானத்தில் ஏறி அவர் பயணம் மேற்கொண்டார். கிட்டத்தட்ட 30 நிமிடங்களுக்கு அவர் அந்த விமானத்தில் பயணம் மேற்கொண்டார்.
இதையும் படிக்க | லக்கீம்பூா்: உ.பி. அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு; வழக்குப் பதிவு விவரங்களை அளிக்க வேண்டும்
முன்னாள் குடியரசு தலைவர்கள் அப்துல் கலாம், பிரதீபா பாட்டில், முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் ஜார்ஜ் பெர்னாண்டஸ், நிர்மலா சீதாராமன் ஆகியோர் இந்த போர் விமானத்தில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.