இபிஎஸ் தலைமையிலான அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் தேர்தல் ஆணையத்தில் அளிப்பு
அதிமுகவில் முன்னாள் முதல்வா் எடிப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை இந்திய தலைமைத் தோ்தல் ஆணையத்தில் அதிமுக அளித்தது.


அதிமுகவில் முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான பொதுக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில் முன்னாள் சட்டத் துறை அமைச்சரும், மாநிலங்களவை அதிமுக உறுப்பினருமான சி.வி. சண்முகம் புதன்கிழமை அளித்தார்.
சென்னையில் கடந்த திங்கள்கிழமை (ஜூலை 11) அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள், எடுக்கப்பட்ட தீர்மானங்கள், முடிவுகள் ஆகியவற்றின் நகல்களை தில்லியில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில் சி.வி.சண்முகம் நேரில் வந்து புதன்கிழமை ஒப்படைத்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கடந்த ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா வகித்த பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் ஏற்படுத்தவும், தேவையான கட்சி சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த விவரங்கள் இன்று தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது.
மேலும், கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளராக முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி ஏகமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.
4 மாதங்களுக்குள் பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்ற தீர்மானமும் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்த ஆவணங்களும் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டன.
மறைந்த முதல்வரின் விருப்பப்படி கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுக்கவும் பொதுக் குழுவில் முடிவு செய்யப்பட்டது.
கடந்த ஜூலை 11- ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் அதிமுகவின் 2,663 (2,665) பொதுக் குழு உறுப்பினர்களில் 2,460 பேர் கலந்துகொண்டனர். இதில் 2,428 உறுப்பினர்கள் கட்சியில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு கையப்பொமிட்டு ஆதரவு அளித்துள்ளனர். இந்த ஆவணங்களும் இன்று தேர்தல் ஆணையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
பொதுக்குழு நடைபெற்ற அன்றைய தினமும், உடனடியாக தேர்தல் ஆணையத்துக்குதிற்கு மின்னஞ்சல் வாயிலாக இந்தத் தீர்மானங்கள் மற்றும் விவரங்கள் அனுப்பப்பட்டன. பின்னர், தபால் முலமாகவும் இன்று நேரடியாகவும் அளிக்கப்பட்டுள்ளன.
உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தின் உத்தரவில் அதிமுக பொதுக்குழுவுக்கு மட்டுமே உச்சபட்ச அதிகாரம் உள்ளது என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
2017-ஆம் ஆண்டு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் மனு செய்த போதும், மக்கள் பிரதிநிதிகள் அடிப்படையில் பொதுக்குழு அமைப்பின் தீர்மானமே ஏற்றுக் கொள்ளப்பட்டு, இதில் நாங்கள் தலையிடுவதற்கில்லை எனக் கூறிவிட்டனர்.
பெரும்பான்மையை அடைப்படையாகக் கொண்டதுதான் ஜனநாயகம் என்பதை நீதிமன்றங்களும் தெளிவுபடுத்திவிட்டது. ஓ.பன்னீர்செல்வம், தொண்டர்களிடம் மரியாதையை இழந்து விட்டார் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...