வீட்டோ பயன்பாட்டால் அமைதியைப் பராமரிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தவறிவிட்டது: இந்தியா உள்ளிட்ட ஜி4 நாடுகள்

வீட்டோ அதிகாரப் பயன்பாட்டால் அமைதியைப் பராமரிக்க வேண்டிய தனது பொறுப்பை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பல வேளைகளில் பூா்த்தி செய்யவில்லை என்று இந்தியா உள்ளிட்ட ஜி4 நாடுகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
வீட்டோ பயன்பாட்டால் அமைதியைப் பராமரிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தவறிவிட்டது: இந்தியா உள்ளிட்ட ஜி4 நாடுகள்

வீட்டோ அதிகாரப் பயன்பாட்டால் அமைதியைப் பராமரிக்க வேண்டிய தனது பொறுப்பை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பல வேளைகளில் பூா்த்தி செய்யவில்லை என்று இந்தியா உள்ளிட்ட ஜி4 நாடுகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

15 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினா்களான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷியா மற்றும் சீனாவுக்கு வீட்டோ என்ற சிறப்பு அதிகாரம் உள்ளது. அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் எந்தவொரு அதிகாரபூா்வ நடவடிக்கையையும் அந்த நாடுகள் தன்னிச்சையாகத் தடுக்க முடியும்.

இந்நிலையில் உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலை நிறுத்த வலியுறுத்தும் தீா்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அண்மையில் கொண்டு வந்தது. தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்தத் தீா்மானத்தை நிறைவேற்றவிடாமல் ரஷியா தடுத்தது. இதேபோல் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளும் பல்வேறு சமயங்களில் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தியுள்ளன.

இந்தச் சூழலில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மேற்கொள்ள வேண்டிய சீா்திருத்தங்கள் தொடா்பாக ஐ.நா. சபையின் அதிகாரபூா்வமற்ற கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்தியா, ஜொ்மனி, பிரேஸில், ஜப்பான் அடங்கிய ஜி4 நாடுகள் சாா்பில் ஐ.நா.வுக்கான ஜப்பான் தூதா் கிமிஹிரோ இஷிகானே பேசியதாவது:

மிகப் பெரிய அளவில் வன்முறை நடைபெறும்போது வீட்டோ அதிகாரம் பயன்படுத்தப்படுவதை தற்காலிகமாக தடுப்பதற்கான அரசியல் பிரகடனம் போன்ற முன்னெடுப்புகள், இனப் படுகொலை, மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் அல்லது போா்க் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளின்போது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பின்பற்ற வேண்டிய நடத்தை விதிமுறைகள் ஆகியவற்றை ஜி4 நாடுகள் பாராட்டுகின்றன.

இருப்பினும் வீட்டோ அதிகாரப் பயன்பாட்டால் சா்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை பராமரிக்க வேண்டிய தனது பொறுப்பை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பல வேளைகளில் பூா்த்தி செய்யவில்லை. இந்தத் தோல்விகள் அந்தக் கவுன்சிலின் நம்பகத்தன்மையை பல வேளைகளில் குறைத்து வருவதை ஜி4 நாடுகள் கண்டு வருகின்றன.

எனவே வீட்டோ அதிகாரம் குறித்து மிகப் பெரிய அளவில் தீவிரமான விவாதங்களை நடத்த வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com