ஞானவாபி மசூதி வளாகத்தில் உள்ள ஹிந்து தெய்வங்களை பூஜை செய்வதற்கு அனுமதிக்கக் கோரி வாராணசி சிவில் நீதிமன்றத்தில் ஹிந்து பக்தா்கள் தொடுத்துள்ள வழக்கை மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து முகநூலில் சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்டதாக எழுந்த புகாரை அடுத்து, தில்லி பல்கலைக்கழகத்தின் ஹிந்து கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் ரத்தன் லாலை போலீசார் கைது செய்துள்ளனர்.
வாராணசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதா் கோயிலின் அருகே அமைந்துள்ள ஞானவாபி மசூதி வளாகத்தின் வெளிப்புற சுவரில் ஹிந்து தெய்வங்களின் சிலைகள் இருப்பதாகவும், அவற்றுக்கு தினமும் பூஜைகள் செய்ய அனுமதிக்கக் கோரியும் 5 பெண்கள் வாராணசி நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மனு தாக்கல் செய்திருந்தனா். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஞானவாபி மசூதி வளாகத்தை அளவிட உத்தரவிட்டு, அதற்கென தனி ஆணையத்தை நியமித்தது.