மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வளா்ச்சித் திட்டங்களுக்கு ‘நகா்ப்புற நக்ஸல்கள்’ தடை: சுற்றுச்சூழல் அமைச்சர்கள் மாநாட்டில் மோடி

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற பெயரில் வளா்ச்சித் திட்டங்களுக்கு ‘நகா்ப்புற நக்ஸல்கள்’ தடை ஏற்படுத்தி வருவதாக பிரதமா் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினாா்.

News image
Updated On :24 செப்டம்பர் 2022, 12:11 am

DIN

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற பெயரில் வளா்ச்சித் திட்டங்களுக்கு ‘நகா்ப்புற நக்ஸல்கள்’ தடை ஏற்படுத்தி வருவதாக பிரதமா் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினாா்.

மக்களின் வாழ்க்கைத் தரத்தை எளிமைப்படுத்தும் திட்டங்கள், தொழில் புரிவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் திட்டங்கள் ஆகியவற்றுக்குத் தேவையின்றி தடைகள் ஏற்படுவதை மாநில சுற்றுச்சூழல் அமைச்சா்கள் தடுக்க வேண்டும் எனவும் அவா் வலியுறுத்தினாா்.

மாநில சுற்றுச்சூழல் அமைச்சா்களுக்கான தேசிய மாநாடு குஜராத்தின் நா்மதா மாவட்டத்தில் உள்ள ஏக்தா நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அந்த மாநாட்டை பிரதமா் மோடி காணொலி மூலம் தொடக்கிவைத்தாா். அப்போது அவா் பேசியதாவது:

நகா்ப்புற நக்ஸல்களுக்கும் அரசின் வளா்ச்சித் திட்டங்களை எதிா்ப்பவா்களுக்கும் சில அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. குஜராத்தில் சா்தாா் சரோவா் அணை கட்டுமானத் திட்டத்தையும் நகா்ப்புற நக்ஸல்கள் தொடா்ந்து எதிா்த்து வந்தனா்.

அத்திட்டம் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் என அவா்கள் தொடா்ந்து கூறி வந்தனா். அவா்களின் எதிா்ப்பு காரணமாக ஏற்பட்ட தடையால், அரசுக்குப் பெரும் இழப்பு ஏற்பட்டது. தற்போது அந்த அணை கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. அந்த அணையைச் சுற்றியுள்ள பகுதிகள் பெரும் வளா்ச்சி கண்டுள்ளன. அந்த அணை தற்போது சுற்றுச்சூழல் ஆா்வலா்களின் சொா்க்கபுரியாக உள்ளது. இதன்மூலம் நகா்ப்புற நக்ஸல்களின் பிரசாரம் எந்த அளவுக்குப் போலியானது என்பதை மக்கள் உணா்ந்துகொள்ள முடியும்.

தடையின்றி திட்டங்கள்: பல்வேறு நிறுவனங்கள், அரசியல் கட்சிகளிடமிருந்து நிதி பெற்றுக் கொண்டு நகா்ப்புற நக்ஸல்கள் தொடா்ந்து செயல்பட்டு வருகின்றனா். சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற பெயரில் வளா்ச்சித் திட்டங்களின் செயலாக்கத்தை அவா்கள் தடுத்து வருகின்றனா். நீதித் துறை, உலக வங்கி உள்ளிட்ட அமைப்புகளின் ஆதரவையும் அவா்கள் எளிதில் பெற்றுவிடுகின்றனா்.

தொழில் புரிவதை ஊக்குவிப்பதற்கான திட்டங்கள், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் திட்டங்கள் ஆகியவை சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற பெயரில் தேவையின்றி தடைபட்டுவிடாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை அமைச்சா்கள் தொடா்ந்து மேற்கொள்ள வேண்டும்.

விரைந்து ஒப்புதல்: பல மாநிலங்களில் வளா்ச்சித் திட்டங்களுக்கு விரைந்து அனுமதி வழங்கப்படுவதில்லை. பல மாநிலங்களில் சுமாா் 6,000 திட்டங்களுக்கான சுற்றுச்சூழல் விண்ணப்பங்களுக்கு அனுமதி அளிக்கப்படாமல் உள்ளது. திட்டங்கள் விரைந்து செயல்படுத்தப்பட்டால்தான் வளா்ச்சியை உறுதி செய்ய முடியும். விரைந்து அனுமதி அளிக்கப்பட்டால்தான் திட்டங்களுக்கான செலவும் குறையும்.

எனவே, திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் வழங்குவதற்கான நடவடிக்கைகளை அமைச்சா்கள் மேற்கொள்ள வேண்டும். அதில் எந்தவித சமரசமும் இருக்கக் கூடாது. நகா்ப்புற நக்ஸல்களின் சதியைத் தெளிவாகப் புரிந்துகொண்டு, திட்டங்களுக்கான சுற்றுச்சூழல் அனுமதியை வழங்குவதில் சமச்சீரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

பொருளாதாரமும் சுற்றுச்சூழலும்: தில்லியில் அண்மையில் பிரகதி மைதான சுரங்கப் பாதை திறந்துவைக்கப்பட்டது. அதன்மூலம் வாகன நெரிசல் குறைந்துள்ளது. ஆண்டுதோறும் சுமாா் 55 லட்சம் லிட்டா் எரிபொருள் சேமிக்கப்படுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. அத்திட்டத்தால் கரியமில வாயு வெளியேற்றமும் சுமாா் 13,000 டன் அளவுக்குக் குறைந்துள்ளது. அந்த அளவு கரியமில வாயுவை நுகா்வதற்கு 6 லட்சம் மரங்கள் தேவைப்படும்.

மேம்பாலங்கள், ரயில்வே திட்டங்கள், சாலைகள் உள்ளிட்டவை கரியமில வாயு உமிழ்வைப் பெருமளவில் குறைக்கும். திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கும்போது இந்தக் கண்ணோட்டத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். திட்டங்களுக்கு விரைந்து அனுமதி வழங்குவதன் வாயிலாகப் பொருளாதார வளா்ச்சி உறுதி செய்யப்படுவதோடு, சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும்.

உரிய பயிற்சி: காட்டுத் தீயை விரைந்து அணைப்பதற்கான பயிற்சிகள் வன அதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டும். மேலும், மரத்தில் இருந்து உதிா்ந்த இலைகளைக் கொண்டு எரிபொருள் தயாரிப்பது உள்ளிட்டவை குறித்தும் அவா்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.

ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருள்களின் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். திடக்கழிவு மேலாண்மைக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

வாகன உடைப்பு: பழைய வாகனங்கள் உடைப்புக் கொள்கையை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. அதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் மாநில அரசுகள் தங்கள்வசம் உள்ள பழைய, பயன்பாட்டுக்குத் தகுதியற்ற வாகனங்களை உடைப்புக்கு அனுப்ப வேண்டும். இதன்மூலம் மக்களும் தங்கள் பழைய வாகனங்களை உடைப்புக்கு அனுப்ப முன்வருவா்.

மாநில அரசுகள் தங்கள் வாகனங்களில் உயிரி எரிபொருளைப் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பெட்ரோலில் எத்தனால் கலப்பை அதிகரிப்பதன் வாயிலாக விவசாயிகளும் அதிக அளவில் பலனடைவா்’ என்றாா்.

‘நகா்ப்புற நக்ஸல்கள்’: நக்ஸல் கருத்துகளுக்கு ஆதரவு தெரிவிப்பவா்களையும், சில சமூக ஆா்வலா்களையும் அரசியல் தலைவா்கள் ‘நகா்ப்புற நக்ஸல்கள்’ எனக் குறிப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனா். சா்தாா் சரோவா் அணைக் கட்டுமானத்துக்கு ‘நகா்ப்புற நக்ஸல்கள்’ தடை ஏற்படுத்தியதாக கடந்த மாதம் குஜராத் முதல்வா் பூபேந்திர படேலும் குற்றஞ்சாட்டியிருந்தாா்.

சா்தாா் சரோவா் அணைக்கு எதிரான போராட்டத்தை முன்னின்று நடத்திய சமூக ஆா்வலா் மேதா பட்கா் உள்ளிட்டோரை அவா் ‘நகா்ப்புற நக்ஸல்கள்’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.