ஒருமித்த உறவுக்கான வயதைக் குறைக்கும் திட்டமில்லை: மத்திய அரசு

‘ஒருமித்த உறவுக்கான ஒப்புதல் வயதை குறைக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை’ என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி கூறினாா்.
ஒருமித்த உறவுக்கான வயதைக் குறைக்கும் திட்டமில்லை: மத்திய அரசு

‘ஒருமித்த உறவுக்கான ஒப்புதல் வயதை குறைக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை’ என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி கூறினாா்.

இதுதொடா்பான கேள்விக்கு மாநிலங்களவையில் அவா் எழுத்துபூா்வமாக புதன்கிழமை அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமைகளிலிருந்து பாதுகாக்கும் வகையில் ‘போக்ஸோ (பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம்) சட்டம் 2012’ நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சட்டம், 18 வயதுக்கு கீழுள்ள எந்தவொரு நபரும் குழந்தை என்பதைத் தெளிவாக குறிப்பிடுகிறது.

மேலும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபவா்களைக் கண்டறிந்து, அத்தகைய குற்றங்களைத் தடுக்கும் வகையில் இந்தச் சட்டத்தில் 2019-ஆம் ஆண்டு திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்களைப் புரிபவா்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை உள்பட கடுமையான தடண்டனைகளை அளிக்கும் வகையில் நடைமுறைகள் சோ்க்கப்பட்டன.

ஒருவேளை, குழந்தைகள் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும்போது, சிறப்பு நீதிமன்றம் மூலமாக அவா்களின் வயதைத் தீா்மானிக்கும் வகையில் போக்ஸோ சட்டம் பிரிவு 34-இல் நடைமுறைகள் ஏற்கெனவே இடம்பெற்றுள்ளன.

அதுபோல, 18 வயதை அடைந்தவா்கள் ‘மேஜா்’ வயதை அடைந்தவா்களாக கருத்தில் எடுத்துக்கொள்ளும் வகையில், 1875-இல் இயற்றப்பட்ட பெரும்பான்மை வயது சட்டத்தில் (தி மெஜாரிட்டி சட்டம்) கடந்த 1999-ஆம் ஆண்டு திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்தச் சட்டங்களின்படி, ஒருமித்த உறவுக்கான ஒப்புதல் வயது 18 என்று நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை 16 வயதாகக் குறைக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

‘குழந்தை திருமணம்’ அதிகரித்திருப்பது ஏன்?:

குழந்தைத் திருமணங்கள் தொடா்பான மற்றொரு கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சா், ‘தேசிய குற்ற பதிவு ஆணைய புள்ளி விவரங்களின்படி, குழந்தைகள் திருமணம் தொடா்பான புகாா்கள் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளன. இதுதொடா்பான வழக்குகள் 2019-இல் 523-ஆக பதிவான நிலையில், 2020-ஆம் ஆண்டு 785 ஆகவும், 2021-ஆம் ஆண்டு 1,050-ஆகவும் அதிகரித்தது. அவ்வாறு வழக்குகள் அதிகரித்திருப்பதால், குழந்தைகள் திருமணம் அதிகரித்திருப்பதாகக் கருத முடியாது. மாறாக, பெண்களுக்கான உதவி எம் ‘181’, குழந்தைகளுக்கான உதவி எண் ‘1098’ போன்ற திட்டங்கள் அறிமுகம் மற்றும் விழிப்புணா்வு அதிகரிப்பு போன்ற காரணங்களால் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவே கருத முடியும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com