லதா மங்கேஷ்கர் மறைவு: குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்

பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர். 
லதா மங்கேஷ்கர் மறைவு: குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்
Published on
Updated on
1 min read


பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர். 

கரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த ஜனவரி 8-ம் தேதி முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த லதா மங்கேஷ்கர் (92) இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலமானார். அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்:

"மற்றவர்களைப் போல எனக்கும் லதா அவர்களின் மறைவு மனமுடையச் செய்துள்ளது. நாட்டின் இயல்பையும், அழகையும் கொண்டு வரும் அவரது பரந்து விரிந்த பாடல்களில் தங்களது உள்ளுணர்வுகள் வெளிப்படுவதைத் தலைமுறைகள் கண்டுள்ளன. பாரத் ரத்னா விருது வென்ற லதா அவர்களிம் சாதனைகள் ஒப்பற்றது.

ஒரு நூற்றாண்டுக்கு ஒருமுறைதான் ஒரு கலைஞன் பிறக்கிறார். லதா அவர்கள் சிறந்த மனிதர், அரவணைப்பு மிகுந்தவர் என்பதை அவரைச் சந்தித்தபோதெல்லாம் பார்த்திருக்கிறேன். அவரது தெய்வீகக் குரல் நிரந்தரமாக ஓய்ந்துவிட்டது. ஆனால், அவரது மெல்லிசைகள் என்றும் அழியாமல் ஒலித்துக்கொண்டிருக்கும். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது இரங்கல்கள்."

பிரதமர் மோடி:

"வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையில் உள்ளேன். அன்பும், அக்கறையும் கொண்ட லதா அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்துவிட்டார். எவராலும் நிரப்ப முடியாத வெற்றிடத்தை அவர் விட்டுச்சென்றுள்ளார். அவரது மென்மையான குரல் மக்களை மயக்கும் இணையற்ற திறன் கொண்டது. இந்திய கலாசாரத்தின் உறுதியானவராக வரும் தலைமுறைகள் அவரை நினைவுகூரும்.

லதா அவர்களின் பாடல்கள் பல்வேறு உணர்வுகளைக் கொண்டு வந்துள்ளன. இந்திய திரைத் துறை பல தசாப்தங்களாக மாற்றமடைந்து வருவதை அவர் பார்த்திருக்கிறார். திரைப்படங்களுக்கு அப்பாற்பட்டு இந்தியாவின் வளர்ச்சியில் எப்போதும் அவர் உணர்ச்சி மிகுந்தவர். வலிமையான வளர்ச்சியடைந்த இந்தியாவைப் பார்க்கவே அவர் எப்போதும் விரும்புவார்.

லதா அவர்களிடமிருந்து எப்போதும் அளவற்ற அன்பு கிடைத்ததை நான் பெருமையாகக் கருதுகிறேன். அவருடனான உரையாடல்கள் என்றும் மறக்க முடியாதது. லதாவின் மறைவையொட்டி சக இந்தியர்களுடன் துக்கத்தைப் பகிர்ந்துகொள்கிறேன். அவரது குடும்பத்தினரைத் தொடர்புகொண்டு எனது இரங்கலைத் தெரிவித்தேன்."
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com