யோகிக்கு எதிராக போட்டியில் குதிக்கும் தலித் தலைவர்; சூடுபிடிக்கும் அரசியல் களம்

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக கோரக்பூர் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக தலித் தலைவர் சந்திரசேகர் ஆசாத் அறிவித்துள்ளார்.
யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

உத்தரப் பிரதேச அரசியல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாகிவருகிறது. தலைவர்கள் கட்சி விட்டு கட்சி மாறுவது, தேர்தல் வாக்குறுதி அளிப்பது போன்ற செய்திகள் சமூகவலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.

அரசியல் களத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளது தலித் தலைவர் ஒருவரின் அறிவிப்பு. உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக கோரக்பூர் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக தலித் தலைவர் சந்திரசேகர் ஆசாத் அறிவித்துள்ளார். 

முன்னதாகவே, இதுகுறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டிருந்த நிலையில், தற்போது பீம் ஆர்மி கட்சி அதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. சட்டப்பேரவை தேர்தலில் முதல்முறையாக களம் காண்கிறார் யோகி ஆதித்யநாத். சந்திரசேகர் ஆசாத்தும் முதல்முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார். பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி இந்த தொகுதியில் இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை.
 
இதேபோல, கடந்த 2019ஆம் ஆண்டு, பிரதமர் மோடிக்கு எதிராக போட்டியிடப்போவதாக சந்திரசேகர் ஆசாத் அறிவித்திருந்தார். ஆனால், அவர் போட்டியிடவில்லை. பின்னர், இதுகுறித்து விளக்கம் அளித்த சந்திரசேகர் ஆசாத், "அந்த சமயத்தில் சொந்த கட்சி இல்லாததால். மாயாவதிக்கோ காங்கிரஸ் கட்சிக்கோ ஆதரவு அளிப்பதுதான் சரி என முடிவு எடுத்தேன்.

தற்போது கட்சி இருப்பதால். யோகிக்கு எதிராக போட்டியிடுவேன். உத்தரப் பிரதேச சட்டப்பேரவை இடம் பெறுவது எனக்கு முக்கியமில்லை. யோகி ஆதித்யநாத் சட்டப்பேரவைக்கு வரக்கூடாது என்பது எனக்கு முக்கியம். எனவே அவர் எங்கு போட்டியிடுகிறாரோ அங்கெல்லாம் போட்டியிடுவேன்" என கூறியிருந்தார்.

கோரக்பூரிலோ, கிழக்கு உத்தரப் பிரதேசத்திலோ பீம் ஆர்மிக்கு என அடிப்படை கட்சி கட்டமைப்பு கூட இல்லை. கடந்த 1989ஆம் ஆண்டு முதல், கோரக்பூர் சதார் தொகுதி பாஜகவின் வசம்தான் உள்ளது. ஒரே ஒரு முறை மட்டும் அகில் இந்திய இந்து மகாசபா அங்கு வென்றது. கடந்த 2017 தேர்தலில், பாஜகவின் ராதா மோகன் தாஸ், 60,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். 

சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனியாக போட்டியிடவுள்ளது பீம் ஆர்மி. முன்னதாக, 25 தொகுதிகள் வழங்குவதாக பீம் ஆர்மிக்கு உறுதிமொழி அளித்ததாகவும் ஆனால், அகிலேஷ் அதை ஏமாற்றிவிட்டதாகவும் சந்திர சேகர் ஆசாத் குற்றம்சாட்டியிருந்தார். 

ஆனால், இரண்டு தொகுதிகள் வரை தர தயாராக இருந்ததாகவும் சந்திரசேகர் அதில் உடன்படவில்லை என்றும் அகிலேஷ் விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com