காதலனை விஷம் கொடுத்துக் கொன்ற கல்லூரி மாணவி கைது: பெற்றோரும் கைதாவார்களா?

கேரள மாநிலம் பாறசாலாவில் ஷரோன் என்ற இளைஞர் விஷம் கொடுத்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவி கிரீஷ்மா மருத்துவமனையில் கைது செய்யப்பட்டார்.
காதலனை விஷம் கொடுத்துக் கொன்ற கல்லூரி மாணவி கைது: பெற்றோரும் கைதாவார்களா?
காதலனை விஷம் கொடுத்துக் கொன்ற கல்லூரி மாணவி கைது: பெற்றோரும் கைதாவார்களா?
Published on
Updated on
1 min read

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பாறசாலாவில் ஷரோன் என்ற இளைஞர் விஷம் கொடுத்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவி கிரீஷ்மா மருத்துவமனையில் கைது செய்யப்பட்டார்.

தற்கொலைக்கு முயன்று திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டிருந்த கிரீஷ்மா, சிகிச்சைபெற்று வரும் நிலையில், காவல்துறையினரால் முறைப்படி கைது செய்யப்பட்டார்.

வழக்கை விசாரித்து வரும் குற்றவியல் பிரிவு காவல்துறையினர், இந்த வழக்கில், கிரீஷ்மாவுடன் மேலும் சிலர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்படுவார்கள் என்றும், அவரது பெற்றோர், உறவினர்கள் இருவரும் வெவ்வேறு காவல்நிலையங்களில் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டிருப்பதாகவும், இளைஞர் கொலையில் இவர்களுக்கும் தொடர்பிருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நான்கு பேரிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணையில், இவர்கள் அளிக்கும் தகவல்களில் முரண்பாடுகள் இருப்பதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

முன்னதாக, கிரீஷ்மா தற்கொலைக்கு முயன்றது குறித்து காவல்துறையினர் கூறுகையில், காவல்நிலையத்தில் உள்ள கழிப்பறையில் வைக்கப்பட்டிருந்த கழிப்பறை சுத்திகரிப்பானைக் குடித்து தற்கொலை முயற்சி மேற்கொண்ட கிரீஷ்மா உடனடியாக திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதலனை விஷம் கொடுத்துக் கொலை செய்ததாக, கிரீஷ்மா மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் கூறுகையில், கிரீஷ்மா தற்கொலை நாடகம் ஆடியது மருத்துவ சிகிச்சையின்போது உறுதி செய்யப்பட்டால், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதே வேளையில் அவர் தற்கொலை முயற்சி செய்தது உறுதி செய்யப்பட்டால், காவல்நிலையத்தில் அவரது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

விசாரணைக்காக, நெடுமன்காடு காவல்நிலையத்துக்கு கிரீஷ்மா நேற்று இரவு கொண்டு வரப்பட்டார். அவர் பயன்படுத்திய கழிப்பறையில் சுத்திகரிப்பான்கள் எதுவும் வைக்கப்படவில்லை. ஆனால், மற்றொரு கழிப்பறையில் இருந்தது. அதை எடுத்து அவர் குடித்து தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது.

மருத்துவமனையில் கிரீஷ்மாவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் உடல்நலம் தேறியதும் விசாரணை தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை காவல்துறையினர் நடத்திய விசாரணையின்போது, ஷரோனை விஷம் கொடுத்துக் கொன்றதை கிரீஷ்மா ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது. முதலில் பெற்றோருடன் சேர்ந்தும், பிறகு தனியாகவும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. முதலில் கொலை செய்யவில்லை என்று கூறிய கிரீஷ்மா, காவல்துறையின் கிடுக்கிப்பிடி கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் குற்றத்தை ஒப்புக் கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்படலாம் என்று கூறப்பட்ட நிலையில், காவல்நிலையத்திலேயே தற்கொலை முயற்சி மேற்கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைபெற்று வரும் கிரீஷ்மாவை மருத்துவமனையிலேயே காவல்துறையினர் கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com