ஐந்து மாநில வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க நிர்வாகிகளுக்கு கார்கே உத்தரவு

ஐந்து மாநிலத் தோ்தல் வாக்கு எண்ணிக்கையை ஐந்து பொறுப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களை கண்காணிக்குமாறு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உத்தரவிட்டுள்ளார். 
ஐந்து மாநில வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க நிர்வாகிகளுக்கு கார்கே உத்தரவு

புது தில்லி: 2024 மக்களவைத் தோ்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படும் நிலையில், ஐந்து மாநிலத் தோ்தல் வாக்கு எண்ணிக்கையை ஐந்து பொறுப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களை கண்காணிக்குமாறு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உத்தரவிட்டுள்ளார். 

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கா் ஆகிய 4 மாநில பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை (டிச. 3) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

வடகிழக்கு மாநிலமான மிஸோரம் மாநிலத்திலும் இதே நாளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருந்த நிலையில்,கிறிஸ்தவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை புனிதமான நாளாக கருதப்படுவதாலும், அன்றைய தினம் பெருமளவில் மக்கள் தேவாலயங்களுக்குச் செல்வா் என்பதாலும் வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்ற வேண்டும் என்று தேவாலயங்கள், சமூக அமைப்புகள், அரசியல் கட்சியினா் எனப் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று,வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அங்கு திங்கள்கிழமை (டிச. 4) வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், ஐந்து மாநிலத் தோ்தல் வாக்கு எண்ணிக்கையை ஐந்து பொறுப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களை கண்காணிக்குமாறு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உத்தரவிட்டுள்ளார். 

இதையடுத்து தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பதற்காக, கர்நாடக துணை முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான டி.கே.சிவகுமாரும் சனிக்கிழமை ஹைதராபாத் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.காங்கிரஸ் தலைவர் ரந்தீப் சுர்ஜேவாலா மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இருக்கிறார்.

தோ்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்பு முடிவுகளின்படி, மத்திய பிரதேசத்தில் பாஜக 47 சதவிகித வாக்குகளைப் பெற்று 140-162 இடங்களைப் பெற்று ஆட்சியைத் தக்கவைக்கும். காங்கிரஸ் 41 சதவிகித வாக்குகளுடன் 60-90 இடங்களைப் பெற வாய்ப்புள்ளது. மற்றவர்கள் 12 சதவிகித வாக்குகளையும் 3 இடங்களையும் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சத்தீஸ்கரில், மூன்று கருத்துக் கணிப்புகள் சத்தீஸ்கரில் காங்கிரஸும் ஆட்சியைத் தக்க வைக்கும் என கணித்துள்ளன, மற்றவை அந்த கட்சி வெற்றி பெறும் நிலையில் இருப்பதாக கணித்துள்ளன.முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையில் காங்கிரஸ் தேர்தலில் போட்டியிட்டது.

இந்தியாவின் இளம் மாநிலமான தெலங்கானாவில் ஆளும் பாரத ராஷ்டிர சமிதி, காங்கிரஸ், பாஜக என மும்முனைப் போட்டி காணப்பட்டது.இதற்கிடையில்,வியாழக்கிழமை வெளியான கருத்துக் கணிப்புகள், தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கத் தயாராக இருப்பதாகவும்,ஆளும் பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்)10 ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகு பெரும்பான்மையை இழக்கும் என்றும் கணித்துள்ளது.

ராஜஸ்தானில் தோ்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்பு முடிவுகளின்படி, மாநிலத்தில் கடுமையான போட்டியின் நிலையை வலுப்படுத்தியது, முக்கியமான இந்தி ஹார்ட்லேண்ட் மாநிலத்தில் வெற்றியாளரின் கணிப்பில் வேறுபாடுகள் உள்ளன. பாஜக - காங்கிரஸ் இடையிலான பலப்பரீட்சையாக கருதப்படுகிறது.

மிஸோரமில் ஆளும் மிஸோ தேசிய முன்னணி, பிராந்திய கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம், காங்கிரஸ், பாஜக என பலமுனைப் போட்டி நிலவுவதால் மிஸோரமில் தொங்கு பேரவை அமையக் கூடும் என்று வாக்குக் கணிப்புகள் கூறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com