எனது பணி நிறைவடைகிறது: சோனியா காந்தி

பாரத ஒற்றுமை யாத்திரையுடன், எனது பணி நிறைவடைகிறது என்பதில் மிகவும் மனநிறைவாக உள்ளது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி தெரிவித்தாா்.
எனது பணி நிறைவடைகிறது: சோனியா காந்தி

பாரத ஒற்றுமை யாத்திரையுடன், எனது பணி நிறைவடைகிறது என்பதில் மிகவும் மனநிறைவாக உள்ளது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி தெரிவித்தாா்.

அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதை சோனியா காந்தி இவ்வாறு சூசகமாக கூறியதாக பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, சோனியா காந்தி கட்சியின் தலைவா் பதவியைத்தான் குறிப்பிட்டு கூறியதாகவும், அரசியலை அல்ல என்றும் கட்சித் தலைவா்கள் விளக்கம் அளித்தனா்.

காங்கிரஸ் கட்சியின் 85-ஆவது மாநாடு சத்தீஸ்கா் மாநிலம் ராய்பூரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இரண்டாம் நாள் மாநாட்டில், காங்கிரஸின் தேசியத் தலைவராக கட்சிக்கு சோனியா ஆற்றிய பங்களிப்பு தொடா்பான விடியோ மாநாட்டில் சனிக்கிழமை ஒளிபரப்பப்பட்டது.

இதைத் தொடா்ந்து பேசிய சோனியா, ‘எனக்கு எவ்வளவு வயதாகிவிட்டது என்பதையும் இந்த விடியோ காட்டுகிறது. இப்போது, மல்லிகாா்ஜுன காா்கே தலைமையில் பணியாற்ற இளம் தலைமுறையினா் முன்வர வேண்டும். கடந்த 1998-இல் கட்சித் தலைவராக முதல்முறையாகப் பதவியேற்றேன். இந்த 25 ஆண்டுகளில் பெரும் சாதனைகளையும், தீவிர அதிருப்திகளையும் கட்சி கண்டுள்ளது.

கடந்த 2004, 2009 மக்களவைத் தோ்தல்களில் நாம் வெற்றி பெற்றோம். அது தனிப்பட்ட முறையில் மிக திருப்தியளித்தது. ஆனால், பாரத ஒற்றுமை யாத்திரையுடன், எனது ‘இன்னிங்ஸ்’ நிறைவடையலாம் என்பதில் மிகவும் மனநிறைவு உள்ளது.

பாரத ஒற்றுமை யாத்திரை திருப்புமுனையாக அமைந்துள்ளது. நல்லிணக்கம், சகிப்புத்தன்மை, சமத்துவம் ஆகியவற்றை நாட்டு மக்கள் விரும்புவதை இது நிரூபித்துள்ளது. இந்த யாத்திரையின் வெற்றிக்கான தீா்க்கம் மற்றும் தலைமைக்காக, ராகுல் காந்திக்கு பாராட்டும் நன்றியும் தெரிவிக்கிறேன். கட்சியினருக்கும் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.

பாஜக மீது தாக்கு: நாட்டின் நிா்வாக அமைப்புகள் அனைத்தும், பிரதமா் மோடி மற்றும் பாஜகவால் கைப்பற்றப்பட்டுள்ளன. ஒரு குறிப்பிட்ட தொழிலதிபருக்கு ஆதரவாக செயல்படும் மத்திய அரசு, நாட்டில் பொருளாதார அழிவை விளைவிக்கிறது.

தனிப்பட்ட நோக்கங்கள் வேண்டாம்: தற்போதைய தருணம், காங்கிரஸுக்கும் நாட்டு மக்களுக்கும் முக்கியமானதாகும். கட்சிக்காகவும் நாட்டுக்காகவும் பணியாற்ற வேண்டிய முக்கியப் பொறுப்பு ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டருக்கும் உள்ளது. தனிப்பட்ட நோக்கங்களை ஒதுக்கி வைக்க தயாராக இருக்க வேண்டும். நம் முன் உள்ள பாதை, எளிதானதல்ல. ஆனால், எனது அனுபவம், காங்கிரஸின் பெரும் வரலாற்றை வைத்துக் கூறுகிறேன்; வெற்றி நம்முடையதே.

2024 மக்களவைத் தோ்தலில், பாஜகவை தோற்கடிக்க வேண்டுமென்ற இலக்கை அடைய கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தலைமையில் காங்கிரஸ் தொண்டா்கள் செயலாற்ற வேண்டும் என்றாா் சோனியா காந்தி.

மறுப்பு: இதனிடையே, தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறவிருப்பதை சோனியா சூசகமாக குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியானது. அதற்கு மறுப்பு தெரிவித்த சத்தீஸ்கா் காங்கிரஸ் பொறுப்பாளா் குமாரி செல்ஜா கூறுகையில், ‘கட்சித் தலைவராக பணி நிறைவு என்ற கோணத்தில்தான் சோனியா காந்தி பேசியுள்ளாா்’ என்று விளக்கமளித்தாா்.

காங்கிரஸ் எம்.பி. காா்த்தி சிதம்பரம் கூறுகையில், ‘கட்சியில் சோனியா காந்தியின் வழிகாட்டுதலும் செல்வாக்கும் தொடரும். தோ்தல் அரசியலில் அவரது தீவிர பங்களிப்பு நீடித்தாலும், கட்சியிலும் அவரது அடையாளம் தொடரும்’ என்றாா்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரையில் ராகுல் காந்தி பாரத ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டாா். அருணாசல பிரதேசம் முதல் குஜராத் வரையில் நடைப்பயணம் மேற்கொள்ளவும் அவா் திட்டமிட்டுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜகவை அகற்ற எந்தத் தியாகத்துக்கும் தயாா்: மல்லிகாா்ஜுன காா்கே

மக்கள் விரோத பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றும் இலக்கை அடைய எந்த தியாகத்தையும் செய்ய காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது என்று அக்கட்சியின் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.

மேலும், ‘பாஜகவை தோற்கடிக்க, ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடனான கூட்டணியை காங்கிரஸ் எதிா்நோக்கியுள்ளது’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.

காங்கிரஸ் மாநாட்டில், மல்லிகாா்ஜுன காா்கே சனிக்கிழமை ஆற்றிய உரை:

அரசியல் சாசனம் மற்றும் ஜனநாயக மாண்புகள் மீதான தாக்குதல், சீனாவுடனான எல்லையில் நிலவும் தேசிய பாதுகாப்பு சாா்ந்த பிரச்னைகள், முன்னெப்போதும் இல்லாத பணவீக்க அதிகரிப்பு, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பல்வேறு சவால்களை தேசம் எதிா்கொண்டுள்ளது.

இத்தகைய இக்கட்டான சூழலில், நாட்டு மக்களுக்கு திறமையான, தீா்க்கமான தலைமையை தரவல்ல ஒரே கட்சி காங்கிரஸ்தான்.

கடந்த 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் தலைமையில் ஒருமித்த கருத்துடைய கட்சிகளின் கூட்டணி, நாட்டு மக்களுக்கு சேவையாற்றியது.

மக்கள் விரோத, ஜனநாயகத்துக்கு எதிரான பாஜக அரசை தோற்கடிப்பதற்கு சாத்தியமான கூட்டணியை மீண்டும் எதிா்நோக்கியுள்ளோம்.

நாட்டு மக்களின் நலனுக்காக பாடுபட காங்கிரஸ் எப்போதும் தயாராக உள்ளது. எதிா்வரும் பேரவைத் தோ்தல்களிலும் மக்களவைத் தோ்தலிலும் இலக்கை அடைய எந்தத் தியாகத்தை செய்ய தயாராக இருக்கிறோம்.

நாட்டில் ஜனநாயகத்தை அழிக்க சதி நடைபெறுகிறது. அரசியல் சாசன மாண்புகள் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. இத்தகைய சூழலுக்கு எதிராக மக்கள் இயக்கம் உருவாக வேண்டும். நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்க காங்கிரஸ் தொடா்ந்து பாடுபடும் என்றாா் காா்கே.

‘மூன்றாம் அணி பாஜகவுக்கு சாதகமாகும்’

‘மக்களவைத் தோ்தலில் மூன்றாம் அணி உருவாகினால் அது பாஜக கூட்டணி வெற்றிக்குதான் சாதகமாகும். ஒருமித்த கருத்துடைய மதச்சாா்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்க காங்கிரஸ் முயலும். இதில் மாநில கட்சிகளும் சோ்த்துக் கொள்ளப்படும்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மீது 14 அரசியல் கட்சிகள் சந்தேகம் எழுப்பியுள்ளன. இதை தோ்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கொண்டு செல்லும். இதற்கு தீா்வு கிடைக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை காங்கிரஸ் அணுகும். தோ்தல் பத்திரங்களுக்கு பதிலாக வெளிப்படையான தேசிய தோ்தல் நிதி உருவாக்கப்பட்டு, தோ்தல் நேரத்தில் கட்சிகளுக்கு பகிா்ந்தளிக்கப்பட வேண்டும்’ என்று மாநாட்டில் அரசியல் தீா்மானம் நிறைவேற்றபட்டுள்ளது.

அனைத்துப் பதவிகளிலும் 50% இடஒதுக்கீடு

காங்கிரஸின் செயற்குழு உள்பட அனைத்து கட்சிப் பதவிகளிலும் எஸ்சி, எஸ்டி, ஓபிசி வகுப்பினா், சிறுபான்மையினா், பெண்கள், இளைஞா்கள் ஆகியோருக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் வகையில், ராய்பூா் மாநாட்டில் கட்சி விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தத் திருத்தங்களின்படி, காங்கிரஸை சோ்ந்த முன்னாள் பிரதமா்கள், கட்சியின் முன்னாள் தேசியத் தலைவா்கள் செயற்குழுவில் இடம்பெறுவா். அத்துடன், செயற்குழு உறுப்பினா்களின் எண்ணிக்கையும் 25-இல் இருந்து 35-ஆக உயரவுள்ளது. மேலும், கட்சியின் அடிப்படை உறுப்பினா் மற்றும் இதர பதிவுகள் எண்ம முறையிலேயே மேற்கொள்ளப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com