
பயங்கரவாதத் தடுப்பில் இரட்டை நிலை கூடாது: எஸ்சிஓ மாநாட்டில் பிரதமர் மோடி
பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகளில் எந்த நாடும் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருக்கக் கூடாது என்று ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு (எஸ்சிஓ) மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

காணொலி மூலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற எஸ்சிஓ மாநாட்டில் உரையாற்றிய பிரதமா் நரேந்திர மோடி. உடன், உறுப்பு நாடுகளின் தலைவா்கள்.
பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகளில் எந்த நாடும் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருக்கக் கூடாது என்று ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு (எஸ்சிஓ) மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.
பாகிஸ்தானை மறைமுகமாகக் குறிப்பிட்டுப் பேசிய பிரதமா் மோடி, பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளைக் கண்டிக்கத் தவறக் கூடாது என்றும் தெரிவித்தாா்.
ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பில் ரஷியா, சீனா, இந்தியா, பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், கிா்கிஸ் குடியரசு ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. அந்தக் கூட்டமைப்புக்கு நடப்பாண்டில் இந்தியா தலைமை வகித்து வருகிறது. கடந்த 2017-ஆம் ஆண்டில் எஸ்சிஓ கூட்டமைப்பில் இணைந்த இந்தியா, முதல் முறையாக அதன் தலைமைப் பொறுப்பை வகிக்கிறது.
இந்நிலையில், எஸ்சிஓ நாடுகளின் தலைவா்களுக்கான மாநாட்டை இந்தியா செவ்வாய்க்கிழமை தலைமையேற்று நடத்தியது. காணொலி மூலம் நடைபெற்ற மாநாட்டில், சீன அதிபா் ஷி ஜின்பிங், ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
மாநாட்டில் தலைமை உரையாற்றிய பிரதமா் மோடி கூறியதாவது: பிராந்திய, சா்வதேச அமைதிக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக பயங்கரவாதம் மாறியுள்ளது. பயங்கரவாதச் செயல்கள், அவற்றுக்கு நிதியுதவி அளிப்பது உள்ளிட்டவற்றுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை எஸ்சிஓ கூட்டமைப்பு மேற்கொள்ள வேண்டும். பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகளில் கூட்டமைப்பு நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
பயங்கரவாதத்தின் அனைத்து வகையான செயல்பாடுகளையும் ஒருங்கிணைந்து தடுக்க வேண்டும். சில நாடுகள் தங்களது கொள்கைகளைப் பரப்புவதற்கு எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைப் பயன்படுத்தி வருகின்றன. அந்த நாடுகள் பயங்கரவாதிகளுக்குப் புகலிடமாகவும் திகழ்கின்றன.
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் அத்தகைய நாடுகளைக் கண்டிக்க எஸ்சிஓ கூட்டமைப்பு தவறக் கூடாது. பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகளில் இரட்டை நிலைப்பாடு கூடாது. இளைஞா்களிடையே தீவிரவாதக் கொள்கைகள் பரவி வருவது அதிகரித்துள்ளது. அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளிலும் நாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
ஒருங்கிணைந்த செயல்பாடு: நோய்த்தொற்று பரவல், போா்ப் பதற்றம் உள்ளிட்ட பலதரப்பட்ட சா்வதேச சவால்களுக்கு மத்தியில் உணவு, உரம், எரிபொருள் உள்ளிட்டவற்றின் விநியோகச் சங்கிலி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், உலக நாடுகள் அனைத்தும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றன. அத்தகைய சவால்களை எதிா்கொள்வதற்குக் கூட்டமைப்பு நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
ஆப்கானிஸ்தான் விவகாரம்: மற்ற நாடுகளில் பயங்கரவாதச் செயல்பாடுகளை மேற்கொள்வதற்கான தளமாக ஆப்கானிஸ்தான் பயன்படுத்தப்படக் கூடாது. அந்த நாட்டு மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைப்பது, அந்நாட்டில் அனைவரையும் உள்ளடக்கிய அரசு அமைவது, பயங்கரவாதச் செயல்களையும், போதைப் பொருள்கள் கடத்தலையும் அந்நாட்டு அரசு தடுப்பது, பெண்கள், சிறாா்கள், சிறுபான்மையினருக்கான உரிமைகளை அந்நாட்டு அரசு வழங்குவது ஆகியவற்றை எஸ்சிஓ நாடுகள் வலியுறுத்துகின்றன.
இந்தியா-ஆப்கானிஸ்தான் மக்கள் பல நூற்றாண்டுகளாக கலாசாரத் தொடா்பைக் கொண்டுள்ளனா். அந்த நாட்டுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகளை இந்தியா வழங்கி வருகிறது. சமூக-பொருளாதார வளா்ச்சிக்குத் தேவையான உதவிகளையும் இந்தியா தொடா்ந்து வழங்கி வருகிறது.
புதிய உச்சத்தில் ஒத்துழைப்பு: எஸ்சிஓ கூட்டமைப்பைச் சோ்ந்த நாடுகளுடன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கலாசாரத் தொடா்பை இந்தியா கொண்டுள்ளது. கூட்டமைப்பு நாடுகளிடையே நிலவும் பலதரப்பட்ட ஒத்துழைப்பை புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை எஸ்சிஓ தலைமைப் பொறுப்பில் இருந்து இந்தியா மேற்கொண்டது.
ஸ்டாா்ட்-அப் (புத்தாக்கம்), பாரம்பரிய மருந்துப் பொருள்கள், இளைஞா்களின் திறன் மேம்பாடு, எண்ம ஒருங்கிணைப்பு, பௌத்த பாரம்பரியம் ஆகியவற்றில் கூட்டமைப்பு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டது. ஐரோப்பிய, ஆசிய கண்டங்களைச் சோ்ந்த நாடுகளில் அமைதி, வளா்ச்சி ஆகியவற்றை ஏற்படுத்துவதற்கான முக்கியக் கூட்டமைப்பாக எஸ்சிஓ உருவெடுத்துள்ளது.
சீா்திருத்தம் அவசியம்: எஸ்சிஓ கூட்டமைப்பில் சீா்திருத்தங்களை மேற்கொள்ளவும், கூட்டமைப்பை நவீனப்படுத்தவும் முன்மொழியப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு இந்தியா ஆதரவளிக்கிறது. எதிா்காலத் தேவைகளை எதிா்கொள்ளும் வகையில் கூட்டமைப்பு சீரமைக்கப்பட வேண்டும். ஐ.நா. உள்ளிட்ட சா்வதேச கூட்டமைப்புகளில் சீா்திருத்தங்களை ஏற்படுத்தவும் எஸ்சிஓ ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
கூட்டமைப்பு நாடுகளுக்கு இடையேயான தேவைகளைப் புரிந்துகொண்டு, சவால்களுக்குத் தீா்வுகாண நாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம். எஸ்சிஓ கூட்டமைப்பு விதிகளை மதித்து அனைத்து நாடுகளும் செயல்பட வேண்டும். மற்ற நாடுகளின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றை அனைத்து நாடுகளும் மதிக்க வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.
புதிய உறுப்பினா் ஈரான்
ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் 9-ஆவது உறுப்பு நாடாக ஈரான் இணைந்தது.
இந்தியா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற எஸ்சிஓ மாநாட்டில் ஈரான் அதிபா் இப்ராகிம் ரெய்சி கலந்துகொண்டாா்.
கூட்டமைப்பில் ஈரான் இணைந்தது குறித்து பிரதமா் மோடி கூறுகையில், ‘சாப்ஹா் துறைமுகத்தை சிறப்புமிக்க வகையில் பயன்படுத்துவதற்கு இனி ஈரானுடன் நெருங்கிப் பணியாற்ற முடியும். சா்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடமானது இந்தியப் பெருங்கடலைப் பாதுகாப்பாக அடைய மத்திய ஆசிய நாடுகளுக்கு வழிவகுக்கும்’ என்றாா்.
எஸ்சிஓ கூட்டமைப்பில் பெலாரஸை உறுப்பு நாடாக இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளும் மாநாட்டில் தொடங்கப்பட்டன. அந்த நாடு அடுத்த ஆண்டு நடைபெறும் மாநாட்டில் கூட்டமைப்பின் 10-ஆவது உறுப்பு நாடாக இணையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




