விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

 திகார் சிறையில் சிசோடியாவிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை

தில்லி கலால் கொள்கை ஊழல் வழக்கில், திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் துணை முதல்வர் மனீஷ் சிசோடியாவிடம் அமலாக்கத் துறையினர் செவ்வாய்க்கிழமை 5 மணிநேரம் விசாரணை

News image
Updated On :7 மார்ச் 2023, 9:56 pm

 நமது நிருபர்

தில்லி கலால் கொள்கை ஊழல் வழக்கில், திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் துணை முதல்வர் மனீஷ் சிசோடியாவிடம் அமலாக்கத் துறையினர் செவ்வாய்க்கிழமை 5 மணிநேரம் விசாரணை நடத்தி, அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர்.
 இது தொடர்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:
 கலால் கொள்கை ஊழல் வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிசோடியாவிடம் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரிகள் கேள்விகள் கேட்டு, அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர். இந்த விசாரணை 5 மணி நேரம் நடைபெற்றது. அவரிடம் அடுத்த இரு தினங்கள் விசாரணை தொடரும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
 திகார் சிறையில் 1-ஆம் எண் அறையில் உள்ள சிசோடியாவிடம் அமலாக்கத் துறையினர் விசாரிக்க உள்ளனர். அப்போது, அமலாக்கத் துறையினர் சிசோடியாவிடம் இருந்த கைப்பேசிகள் மாற்றப்பட்டது குறித்தும், அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் குறித்தும் தில்லியின் கலால் துறை அமைச்சராக அவரால் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் அதற்கான காலங்கள் குறித்தும் விசாரணை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 இந்த வழக்கில் தொடர்புடைய நபர்கள் அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை சட்டத்தின் 19-ஆவது பிரிவை அமலாக்கத் துறை பயன்படுத்தலாம்.
 மத்திய புலனாய்வுத் துறையின் காவலில் சிசோடியா இருந்த போது, அவருடன், அவரது முன்னாள் செயலர் சி.அரவிந்த், அப்போதைய கலால் ஆணையராக இருந்த ஆரவா கோபி கிருஷ்ணா ஆகியோரையும் சேர்த்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் 25-ஆம் தேதி இந்த வழக்கில் சிபிஐ பதிவு செய்த குற்றப்பத்திரிகையில் சிசோடியாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை.
 அதேசமயம் அமலாக்கத் துறை தாக்கல் செய்த 2-ஆவது குற்றப்பத்திரிகையில் சிசோடியாவின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. அதில், சிசோடியாவின் முந்தைய செயலராக இருந்த டானிக்ஸ் அதிகாரி சி. அரவிந்த் அமலாக்கத் துறையிடம் அளித்த வாக்குமூலத்தில், கேஜரிவாலின் இல்லத்திற்கு வருமாறு சிசோடியாவால் அழைக்கப்பட்டிருந்த போது, அவரிடம் மார்ச் 2021 வாக்கில் கலால் கொள்கை தொடர்பான ஜிஓஎம் அறிக்கை அளிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
 சர்ச்சைக்குரிய தில்லி கலால் கொள்கை கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, மத்திய புலனாய்வுத் துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தொடர்பான விவகாரத்தை அமலாக்கத் துறை விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.