தமிழகத்தில் ரூ. 12,178 கோடியில் 12 துறைமுக திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய துறைமுகம், நீர்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்வானந்த சோனோவால் மாநிலங்களவையில் தெரிவித்தார்.
ஒடிஸாவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சுலதா டியோ எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் சோனோவால் அளித்த பதிலின் விவரம்:
பல்வேறு பொருளாதார மண்டலங்கள், துறைமுகங்கள், கப்பல் சரக்கேற்றும் மையங்கள் ஆகியவற்றை இணைக்கும் பல்முனை இணைப்பு உள்கட்டமைப்பை மேம்படுத்த பிரதமரின் விரைவுச் சக்தி தேசியப் பெருந்திட்டத்தின் கீழ் ரூ. 60,872 கோடி செலவில் 101 திட்டங்கள் நாடு முழுக்க மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மத்திய மாநில அரசுகளின் பல்வேறு அமைச்சகங்களை ஒருங்கிணைப்பது பிரதமரின் விரைவுச் சக்தி தேசியப் பெருந்திட்டமாகும். இந்த திட்டத்தில் ரூ. 4,423 கோடி மதிப்பிலான 13 திட்டங்கள் ஏற்கெனவே முடிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 12 திட்டங்கள் மேற்கொள்ளப்படு வருகிறது. இதற்கு தமிழகத்திற்கு ரூ. 12, 178 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் அதிக அளவு திட்டங்கள் குஜராத்(19), மகாராஷ்டிரம் (13), ஆந்திரம் (13) ஆகிய மாநிலங்களில் மேற்கொள்ளப்படுகின்றன.
துறைமுகங்கள், பொருளாதார மண்டலங்களின் இணைப்பு, உள்கட்டமைப்பு இடைவெளிகளை நிவர்த்தி செய்யப்பட்டு, இடையூறுகளைக் குறைக்க கவனம் செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டங்களை உரிய நேரத்தில் முடிக்கப்படுவதையும் உறுதி செய்யப்படுகிறது. மாநிலங்களுக்குத் தேவைப்படும் கூடுதல் நிதிக்கும் வட்டியில்லாத நீண்டகால கடனாக ரூ.5,000 கோடியும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சேலம் உருக்காலை காலியிடம்: சேலம் உருக்காலையில் உள்ள 1,464 ஏக்கர் காலி இடத்தை ராணுவத் தளவாட உற்பத்தி வழித்தடத்திற்கு பயன்படுத்தும் திட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என மற்றொரு கேள்விக்கு மத்திய உருக்குத் துறை இணையமைச்சர் ஃபகன் சிங் குலஸ்தே மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை பதிலளித்தார்.
உருக்காலையில் காலியாக உள்ள 1,464 ஏக்கர் நிலத்தை ராணுவத் தளவாட உற்பத்தி வழித்தடத்திற்கு பயன்படுத்த தமிழக அரசு திட்டமிட்டு இதற்கான அனுமதிக்கு கடந்தாண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுப்பிய முன்மொழிவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதா? மாநில வருவாய்த்துறைக்கு சொந்தமான இந்த நிலத்தை பணமாக்கல் ஆதார வழிமுறைகள் மேற்கொள்ளப்படுகிறதா? என மாநிலங்களவை திமுக உறுப்பினர் பி.வில்சன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு எழுத்துபூர்வமாக பதிலளித்துள்ள மத்திய உருக்குத் துறை இணையமைச்சர் ஃபகன் சிங் குலஸ்தே, "தமிழக அரசு அனுப்பிய முன்மொழிவுகளில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. சேலம் உருக்காலையில் மொத்தம் 3,973.08 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலங்களை பணமாக்கல் ஆதார முறைகளில் பயன்படுத்துவதற்கும் மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை' என்று தெரிவித்துள்ளார்.