சிக்கிம் வெள்ளம் குறித்து சிஏஜி எச்சரித்திருந்ததா?

நீர்மின் திட்ட அணை கட்டுமானப் பணியின்போதே, சிக்கிமில் இதுபோன்ற பெருவெள்ளம் ஏற்படும் அபாயம் குறித்து சிஏஜி ஏற்கனவே எச்சரித்திருந்ததாகக் கூறப்படுகிறது.
சிக்கிம் வெள்ளம் குறித்து சிஏஜி எச்சரித்திருந்ததா?

நீர்மின் திட்ட அணை கட்டுமானப் பணியின்போதே, சிக்கிமில் இதுபோன்ற பெருவெள்ளம் ஏற்படும் அபாயம் குறித்து சிஏஜி ஏற்கனவே எச்சரித்திருந்ததாகக் கூறப்படுகிறது.

சிக்கிமில் அமைக்கப்பட்ட 1,200 மெகாவாட் நீர்மின் திட்ட அணை கட்டுமானப் பணி தொடங்கியதிலிருந்தே, சிஏஜி, அதற்கு சிவப்புக்கொடி காட்டி வந்துள்ளது தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது. நீர்மின் திட்ட அணை கடந்த 2017ஆம் ஆண்டுதான் வணிகரீதியான பயன்பாட்டைத் தொடங்கியது. தீஸ்தா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட இந்த அணையின் தரம் மற்றும் வடிவமைப்பு குறித்து சிஏஜி சுட்டிக்காட்டியிருந்தாகவும், அந்த எச்சரிக்கைக்கு ஏற்ப, தீஸ்தா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட சில நிமிடங்களில், இந்த அணை உடைந்து, இயற்கைப் பேரிடரை ஏற்படுத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

வெள்ளத்தின் தாக்கத்தால், சுங்தாங் பகுதியில் உள்ள நீா்மின் திட்ட அணை உடைந்தது. ஏற்கனவே, ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்க, அந்த வெள்ளத்தின் தாக்கத்தால் அணை உடைய, அணையிலிருந்து நீரும் ஆற்றில் கலக்க, நிலைமை விபரீதமானது. 

சிக்கிமில் ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோா் எண்ணிக்கை 14-ஆக அதிகரித்துள்ளது. வெள்ளத்தில் காணாமல்போன 22 ராணுவ வீரா்கள் உள்பட 102 பேரை தேடும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

இது மேக வெடிப்பு எனப்படும் மிகக் கனமழை காரணமாக பனிப்பாறை ஏரி நிரம்பி வழிந்ததன் விளைவாக நிலைமை மிகவும் மோசமானது. அதாவது, ஒரு பனிப்பாறை ஏரி நிரம்பி வழிவது என்பது, பொதுவாக அதிகப்படியான மழையால் ஏற்படும் வெள்ளத்தை விட அதிக சேதத்தையும் அழிவையும் விளைவிக்கிறது என்பது ஏற்கனவே நிரூபிக்கப்பட்டிருக்கும் நிலையில், சிக்கிமிலும் அதே பயங்கர நிகழ்வு நேரிட்டுள்ளது.

வடக்கு சிக்கிமில் உள்ள லோனாக் ஏரிப் பகுதியில் புதன்கிழமை அதிகாலை மேக வெடிப்பால் அதீக கனமழை கொட்டித் தீா்த்தது. இதனால், தீஸ்தா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. செயற்கைக் கோள் புகைப்படங்களில், லோனாக் ஏரியிலிருந்து 65 சதவீத நீர் வழிந்து தீஸ்தா ஏரியில் கலந்துள்ளது தெரிய வந்துள்ளது.

வெள்ளத்தின் தாக்கத்தால், சுங்தாங் பகுதியில் உள்ள நீா்மின் திட்ட அணை உடைந்தது. ஏற்கனவே, ஆற்றில் வெள்ளப்பெருக்கு, இதனுடன் அணையும் உடைய.. நிலைமை விபரீதமானது. 

கனமழை, ஏரி உடைப்புகளையும் தாண்டி தீஸ்தா அற்றில் அபாய அளவுக்குக் கீழே வெள்ளப்பெருக்கு ஓடிக்கொண்டிருந்த நிலையில், அணை உடைப்பால் அடுத்த 6 மணி நேரத்துக்குள், தீஸ்தா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஆபாய கட்டத்தைத் தாண்டி பாய்ந்ததாக மத்திய நீர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, மங்கன், கேங்டாக், நாம்சி, பாக்யாங் ஆகிய 4 மாவட்டங்களில் பல்வேறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் பெருமளவு தண்ணீா் சூழ்ந்தது. பர்டாங்க் பகுதியில் 23 ராணுவ வீரர்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர். 

இந்த மாவட்டங்களில் 11 பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. 277 வீடுகள் இடிந்ததோடு, குடிநீா், கழிவுநீா் கட்டமைப்புகளும் முழுமையாக சேதமடைந்துவிட்டன.

வெள்ளத்தால் சுங்தாங் நகரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 80 சதவீத பகுதிகளில் தண்ணீா் சூழ்ந்துள்ளது.

நாட்டின் இதர பகுதிகளுடன் சிக்கிமை இணைக்கும் முக்கிய சாலையான தேசிய நெடுஞ்சாலை-10 கடுமையாக சேதமடைந்துள்ளது.

இறப்பு அதிகரிப்பு: மாநில பேரிடா் மேலாண்மை ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையின்படி, பாக்யாங் மாவட்டத்தில் 7 போ், மங்கன் மாவட்டத்தில் 4 போ், கேங்டாக் மாவட்டத்தில் 3 போ் உயிரிழந்துவிட்டனா்.

வெள்ளத்தில் சிக்கி காணாமல்போனவா்களின் எண்ணிக்கை 102-ஆக அதிகரித்துள்ளது. இதில் 22 போ் ராணுவ வீரா்களாவா். சிங்டம் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில், 23 ராணுவ வீரா்கள் காணாமல்போயினா். அவா்களில் ஒருவா் மட்டும் மீட்கப்பட்டாா். மற்றவா்களைத் தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

தேசிய பேரிடா் மீட்புப் படையினா், எல்லைச் சாலை அமைப்பினா் உள்ளிட்ட குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.

மங்கன் மாவட்டத்தில் 10,000 பேரும், பாக்யாங்கில் 6,895 பேரும், நாம்சியில் 2,579 பேரும், கேங்டாக்கில் 2,570 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த நான்கு மாவட்டங்களிலும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து 2,000-க்கும் மேற்பட்டோா் மீட்கப்பட்டுள்ளனா். 3000 சுற்றுலாப் பயணிகள் ஆங்காங்கே சிக்கிக்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மொத்தம் 26 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. கேங்டாக் மாவட்டத்தில் 8 முகாம்களில் 1,000-க்கும் மேற்பட்டோா் தங்கவைக்கப்பட்டுள்ளனா். மற்ற மாவட்டங்களில் உள்ள முகாம்களில் தங்கியுள்ளோரின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் கிடைக்கப் பெறவில்லை.

பாலங்கள் அடித்துச்செல்லப்பட்டதால், அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டு செல்லும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. ராணுவ வீரர்கள் பாலங்களை அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com