ஆசிய பாரா ஒலிம்பிக்கில் 100 பதக்கங்கள்: பிரதமர் மோடி பாராட்டு
சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா 100 பதக்கங்களை வென்றுள்ளதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
சீனாவில் ஹாங்சோ நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் அக்.22 ஆம் தேதி தொடங்கி இன்றுடன் (அக். 28) நிறைவு பெறுகிறது. இந்தியாவிலிருந்து 17 விளையாட்டுப் பிரிவுகளில் 191 வீரர்கள், 112 வீராங்கனைகள் என 303 பேர் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் ஆசிய பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா நேற்று முன்தினம் 80 பதக்கங்களை கடந்திருந்த நிலையில் தற்போது 100 பதக்கங்களைக் கடந்து புதிய சாதனை படைத்திருக்கிறது.
இதையும் படிக்க | கூகுளுக்குப் போட்டியாக ஆப்பிள் உருவாக்கும் 'தேடுபொறி தளம்'?
இன்று(சனிக்கிழமை) காலை நிலவரப்படி இந்தியா 29 தங்கம், 31 வெள்ளி, 51 வெண்கலம் என 111 பதக்கங்களுடன் 5 ஆம் இடத்தில் உள்ளது. 518 பதக்கங்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளது.
முன்னதாக 2018-ல் இந்தோனேஷியாவில் நடைபெற்ற போட்டியில் இந்தியா 72 பதக்கங்களை வென்றிருந்தே அதிகபட்ச எண்ணிக்கையாக இருந்தது.
இந்நிலையில் இந்தியா 100 பதக்கங்களைக் கடந்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,
'ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் 100 பதக்கங்கள்! இணையற்ற மகிழ்ச்சியான தருணம்.
இந்த வெற்றிக்கு நமது விளையாட்டு வீரர்களின் அதீத திறமை, கடின உழைப்பு, உறுதி ஆகியவையே காரணம். இந்த குறிப்பிடத்தக்க சாதனை நம்மை பெருமைப்பட வைக்கிறது.
விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அவர்களுடன் பணிபுரியும் முழு ஆதரவு அமைப்புகளுக்கும் எனது ஆழ்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த வெற்றிகள் நம்மை ஊக்குவிக்கின்றன. நம் இளைஞர்களால் முடியாதது எதுவுமில்லை என்பதைக் காட்டுகின்றன' என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.