இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்ற நடவடிக்கை?

இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்றுவதற்கான தீர்மானத்தை, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் மத்திய அரசு முன்மொழியலாம் என்று கூறப்படுவதாக, தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்
Published on
Updated on
2 min read


இந்தியாவின் பெயரை பாரதம் (ரிபப்ளிக் ஆஃப் பாரத்) என மாற்றுவதற்கான தீர்மானத்தை, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் மத்திய அரசு முன்மொழியலாம் என்று கூறப்படுகிறது.

இதுபற்றி உறுதி செய்ய முடியாத தகவல்கள் பரவிவருகின்றன.

புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் நாடாளுமன்றக் கட்டடத்தில்  செப்டம்பர் 18 -  21ஆம் தேதி வரை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த சிறப்புக் கூட்டத்தில், நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, இந்தியாவின் பெயரை பாரதம் (ரிபப்ளிக் ஆஃப் பாரத்)  என மாற்றுவதற்கான தீர்மானத்தைக் கொண்டுவரலாம் எனக் கூறப்படுகிறது.

மத்திய அரசு வட்டாரங்களிலிருந்தே இந்த தகவல்கள்  வெளிவருவதாகவும் இந்த தீர்மானத்தைத் தாக்கல் செய்வதற்காகத்தான் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் கூட்டப்படுவதாகவும்கூட அவை குறிப்பிடுகின்றன.

இதற்கு வலுவூட்டும் வகையில், ஜி20 மாநாட்டு விருந்தினர்களை அழைப்பதற்கான குடியரசுத் தலைவர் மாளிகையின் அதிகாரப்பூர்வ அழைப்பிதழிலேயே, திரௌபதி முர்மு, பாரத குடியரசுத் தலைவர் (தி பிரசிடென்ட் ஆஃப் பாரத்) என்று அச்சிடப்பட்டுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும் தலைவர்களுக்கு, குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விருந்தில் பங்கேற்க அளிக்கப்பட்டிருக்கும் அழைப்பிதழில், இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்கு பதிலாக, பாரத குடியரசுத் தலைவர் (தி பிரசிடென்ட் ஆஃப் பாரத்) என்று அச்சிடப்பட்டிருப்பது சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.

ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, இந்தியாவின் பெயர் மாற்றம் குறித்து வெளியாகும் தகவல்கள் உண்மைதான் என்பதை இது காட்டுகிறது. குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்களுக்கான விருந்து அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் (தி பிரசிடென்ட் ஆஃப் இந்தியா) என்பதற்கு மாறாக, பாரத குடியரசுத் தலைவர் (தி பிரசிடென்ட் ஆஃப் பாரத்) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இப்போது, ​​அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 1ஐ இப்படித்தான் வாசிக்க வேண்டும் போல, “இந்தியாவாக இருந்த பாரதம், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்” என்று படிக்க வேண்டியது வரும். ஆனால் இப்போது இந்த "மாநிலங்களின் ஒன்றியம்" கூட தாக்குதலுக்கு உள்பட்டுள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையே, அசாம் முதல்வர் ஹிமந்தா விஸ்வா தனது எக்ஸ் பக்கத்தில், பாரத குடியரசு -  மிகவும் மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும்  அமுத காலத்தை நோக்கி வீறுநடை போடுகிறது என்று பதிவிட்டிருக்கிறார்.

இந்த நிலையில், பாஜக தலைமையிலான மத்திய அரசு, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியைப் பார்த்து பயப்படுவதாக ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் மிருத்யுஞ்ஜய் திவாரி குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com