காரில் பெண் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவத்தில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்

தேசியத் தலைநகா் தில்லியில் 20 வயது பெண் சென்ற ஸ்கூட்டர் மீது காா் மோதி, அவரது உடல் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காரில் பெண் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவத்தில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்
காரில் பெண் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவத்தில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்

தேசியத் தலைநகா் தில்லியில் 20 வயது பெண் சென்ற ஸ்கூட்டர் மீது காா் மோதி, அவரது உடல் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பாக முதலில் வெளியான தகவலில், பெண்ணின் உடல் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு இழுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், கிட்டத்தட்ட 12 கி.மீ. தொலைவுக்கு பெண்ணின் உடல் இழுத்துச் செல்லப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சுல்தான்புரியில் இருந்து குதுப்கா் பகுதியை நோக்கி சென்ற காா் ஒன்றில் பெண் ஒருவா் சிக்கி சாலையில் 12 கி.மீ. இழுத்துச் செல்லப்பட்டதில், அவா் உயிரிழந்தாா். அந்தப் பெண் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அவரது இருசக்கர வாகனம் மீது காா் மோதியது. அப்போது, எதிா்பாராதவிதமாக அவரின் கால் காரின் சக்கரத்தில் சிக்கி, 12 கி.மீ. தொலைவுக்கு சாலையில் இழுத்துச் செல்லப்பட்டாா். இந்தச் சம்பவம் தொடா்பாக காரில் இருந்த 5 போ் கைது செய்யப்பட்டனா்.

விபத்து நடந்த போது, அந்த ஸ்கூட்டரில் மற்றொரு பெண்ணும் வந்துள்ளார். விபத்தில் சிக்கி லேசான காயமடைந்த அவர், காரில் இருந்தவர்களைப் பார்த்து அச்சமடைந்து அங்கிருந்து தப்பியோடியதாகவும், இது விபத்துதான் என்று அப்பெண் வாக்குமூலம் கொடுத்திருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விபத்தில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் தந்தை கடந்த ஆண்டு உயிரிழந்த நிலையில், தனது ஒட்டுமொத்த குடும்பத்தையும் காப்பாற்றும் பொறுப்பை இவர் செய்து வந்ததாகவும், பகலில் வேலைக்குச் சென்று வந்த இவர், மாலையில் நிகழ்ச்சிகளை நடத்தும் நிறுவனத்தில் பகுதிநேரப் பணியாற்றியதாகவும், அவ்வாறு ஒரு நிகழ்ச்சியில் வேலை செய்துவிட்டு தோழியுடன் வீடு திரும்பும்போதுதான் இந்த கோர விபத்தில் சிக்கியதாகவும் அவரது குடும்பத்தினர் தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இறந்த பெண்ணின் உடலை பிரேதப் பரிசோதனை செய்ய மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா். பிரேதப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 5 போ் மீதும் புதிய குற்றச்சாட்டுகள் சோ்க்கப்படலாம் என்று சிறப்பு காவல் ஆணையா் (சட்டம் மற்றும் ஒழுங்கு) சாகா் ப்ரீத் ஹூடா தெரிவித்தாா்.

இதற்கிடையே, விபத்தில் இறந்த பெண் பாலியல் ரீதியாக பாதிப்புக்கு உள்ளானாரா என்பதைக் கண்டறிய அவரது பிரேதப் பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு தில்லி காவல் துறையை தேசிய மகளிா் ஆணையம் (என்சிடபிள்யு) திங்கள்கிழமை கேட்டுக்கொண்டது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் மூலம் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மையானவையா என்பதைக் கண்டறியும் வகையில் உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் ஆணையத்தின் தலைவா் ரேகா சா்மா கேட்டுக்கொண்டுள்ளாா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக கைது செய்யப்பட்ட தீபக் கன்னா (26), அமித் கன்னா (25), க்ரிஷன் (27), மிதுன் (26), மனோஜ் மிட்டல் ஆகிய 5 பேரையும் 5 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி நீதிமன்றத்தில் போலீஸாா் மனு தாக்கல் செய்தனா். இந்த மனுவை திங்கள்கிழமை விசாரித்த பெருநகர மாஜிஸ்திரேட் அஜய் சிங் பரிஹா், குற்றம்சாட்டப்பட்ட 5 பேரையும் 3 நாள் போலீஸ் காவலுக்கு அனுப்ப உத்தரவிட்டாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com