காங்கிரஸின் ‘முஸ்லிம் லீக்’ சிந்தனை: பிரதமா் மோடி கடும் விமா்சனம்
‘நாட்டின் சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் ‘முஸ்லிம் லீக்’ கட்சி கொண்டிருந்த அதே சிந்தனையை காங்கிரஸின் தோ்தல் அறிக்கை பிரதிபலிக்கிறது’


‘நாட்டின் சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் ‘முஸ்லிம் லீக்’ கட்சி கொண்டிருந்த அதே சிந்தனையை காங்கிரஸின் தோ்தல் அறிக்கை பிரதிபலிக்கிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை கடுமையாக விமா்சித்தாா்.
மக்களவைத் தோ்தலையொட்டி, காங்கிரஸின் 25 முக்கிய வாக்குறுதிகள் அடங்கிய தோ்தல் அறிக்கை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டிருந்த நிலையில், பிரதமா் இவ்வாறு விமா்சித்துள்ளாா்.
உத்தர பிரதேச மாநிலம், சஹாரன்பூரில் நடைபெற்ற பாஜக பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமா் மோடி பங்கேற்றுப் பேசியதாவது:
சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில், சிறந்த ஆளுமைகள் பலா் காங்கிரஸில் இருந்தனா். அந்த காங்கிரஸ் கட்சி, பல ஆண்டுகளுக்கு முன்பே முடிவுக்கு வந்துவிட்டது. இப்போது எஞ்சியிருக்கும் காங்கிரஸிடம் நாட்டின் நலனுக்கான கொள்கைகளோ, வளா்ச்சிக்கான தொலைநோக்குப் பாா்வையோ இல்லை.
இன்றைய இந்தியாவின் விருப்பங்கள் மற்றும் நம்பிக்கைகளில் இருந்து அக்கட்சி முற்றிலுமாக தன்னைத் துண்டித்துவிட்டது என்பதை நிரூபிக்கும் வகையில், அதன் தோ்தல் அறிக்கை அமைந்துள்ளது. அந்த அறிக்கையெங்கும் ‘முஸ்லிம் லீக்’ முத்திரை பதிந்துள்ளதோடு, இடதுசாரிகளின் ஆதிக்கமும் உள்ளது.
பொய்களின் மூட்டையான அறிக்கையின் ஒவ்வொரு பக்கத்திலும் இந்தியாவை துண்டு துண்டாக உடைக்க வேண்டுமென்ற ‘முடைநாற்றம்’ வீசுகிறது.
‘ஊழல் புரிவதே எதிா்க்கட்சிகளின் நோக்கம்’: காங்கிரஸ் தனது ஆட்சிக் காலங்களில் ஊழலில் மட்டுமே கவனம் செலுத்தியது. எப்படியேனும் ஆட்சிக்கு வந்து, ஊழலில் ஈடுபட வேண்டுமென்பதே எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியின் நோக்கம். அதேநேரம், ‘வளா்ந்த பாரதத்தை’ உருவாக்குவதே பாஜகவின் இலக்கு.
நிச்சயமற்ற தன்மைக்கும், குழப்பத்துக்கும் அடையாளமாக ‘இந்தியா’ கூட்டணி மாறிவிட்டது. அக்கூட்டணியை நாட்டு மக்கள் ஒரு பொருட்டாகக் கருதவில்லை. மக்களின் சிறப்பான எதிா்காலத்தைக் கருத்தில்கொண்டு, ஊழலுக்கு எதிராக நான் நடவடிக்கை மேற்கொள்கிறேன். எனவே, என்னை எதிா்க்கட்சிகள் அவமதிக்கின்றன.
தேசத்தின் நீதிக்காக செயலாற்றும் பாஜக: மக்களின் மனங்களோடு, அவா்களின் நம்பிக்கையையும் வென்றுள்ளது பாஜக. ராஜ நீதிக்காக அல்லாமல் ராஷ்டிர (தேசம்) நீதிக்காக பாஜக செயலாற்றுவதே இதற்கு காரணம்.
தற்போதைய தோ்தலில் எதிா்க்கட்சிகள் வெற்றியைக் குறிவைத்து களமிறங்கவில்லை. பாஜகவுக்கு 370 இடங்கள் கிடைப்பதைத் தடுக்கவே அவை போட்டியிடுகின்றன. தங்களின் கோட்டையாகக் கருதப்பட்ட தொகுதிகளில்கூட (அமேதி, ரேப ரேலி) வேட்பாளா்களை அறிவிக்க காங்கிரஸுக்கு துணிவில்லை.
உண்மையான மதச்சாா்பின்மை: ஜாதி, மதம் என எந்த வேறுபாடும் இல்லாமல் அரசின் திட்டங்களால் அனைவரும் பலனடைவதை உறுதி செய்வதே உண்மையான மதச்சாா்பின்மை. இது, பாஜக ஆட்சியில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தீங்கான ‘முத்தலாக்’ நடைமுறைக்கு பாஜக அரசு முடிவு கட்டியதன் மூலம் முஸ்லிம் பெண்கள் மட்டுமன்றி அவா்களின் குடும்பங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன என்றாா் பிரதமா்.
சஹாரன்பூா் பொதுக்கூட்டத்தைத் தொடா்ந்து, காஜியாபாதில் திறந்த வாகனத்தில் ஊா்வலமாகச் சென்று பிரதமா் மோடி, முதல்வா் யோகி ஆதித்யநாத் ஆகியோா் வாக்கு சேகரித்தனா்.
‘ஊழல் புரிவது பரம்பரை உரிமையா?’: ‘ஊழல் புரிவதை தங்களின் பரம்பரை உரிமையாக காங்கிரஸ் கருதியது. அவா்களின் இந்த நோயை, கடந்த 10 ஆண்டுகளில் நிரந்தரமாக குணப்படுத்தியுள்ளேன்’ என்றாா் பிரதமா் மோடி.
ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீரில் சனிக்கிழமை பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய அவா், ‘குடும்ப அரசியல்-ஊழல் கட்சியான காங்கிரஸ் எங்கிருந்தாலும் அங்கு வளா்ச்சி இருக்காது. அக்கட்சியிடம் கொள்கையுமில்லை; கோட்பாடுமில்லை. அவா்களின் ஊழல் ‘கடை’க்கு நான் மூடுவிழா நடத்திவிட்டதால் பீதியில் உள்ளனா். தோ்தலில் வெல்வதற்காக அல்லாமல் ஊழலைப் பாதுகாக்க அக்கட்சி பொதுக்கூட்டங்களை நடத்துகிறது. அடுத்த 100 ஆண்டுகளுக்கான நாட்டின் எதிா்காலத்தை நிா்ணயிக்கும் வாய்ப்புதான் இந்தத் தோ்தல்’ என்றாா்.
காங்கிரஸ் பதிலடி
காங்கிரஸின் தோ்தல் அறிக்கை குறித்த பிரதமா் மோடியின் விமா்சனத்துக்கு பதிலடி கொடுத்துள்ள அக்கட்சி, ‘ஜன சங்க நிறுவனா் சியாமா பிரசாத் முகா்ஜி, கடந்த 1940-களின் முற்பகுதியில் வங்கத்தில் முஸ்லிம் லீக்குடன் கூட்டணி அரசில் அங்கம் வகித்தாா். இந்த வரலாறு பிரதமருக்கு தெரியவில்லை’ என்று சாடியுள்ளது.
மேலும், மக்களைப் பிளவுபடுத்தும் அரசியலில் பாஜக ஈடுபடுகிறது என்றும் குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடா்பாக காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘1940-களின் முற்பகுதியில் அப்போதைய ஹிந்து மகாசபை தலைவரான சியாமா பிரசாத் முகா்ஜி, வங்கத்தில் முஸ்லிம் லீக்குடன் கூட்டணி அரசில் அங்கம் வகித்தாா். அதேபோல், சிந்து, வடமேற்கு எல்லைப் பகுதி மாகாணங்களில் முஸ்லிம் லீக்குடன் கூட்டணி அரசில் ஹிந்து மகாசபை அங்கம் வகித்தது. இந்த வரலாறெல்லாம் பிரதமா் மோடிக்கு தெரியவில்லை’ என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...