
உத்தர பிரதேசத்தில் ஞானவாபி மசூதியின் வியாஸ்ஜி நிலவறை மீது முஸ்லிம்கள் நடந்து செல்வதற்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஆகஸ்ட் 17-ஆம் தேதிக்கு மாவட்ட நீதிமன்றம் ஒத்திவைத்தது.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி மாவட்டத்தில் உள்ள காசி விஸ்வநாதா் கோயிலையொட்டி ஞானவாபி மசூதி உள்ளது. முகலாய மன்னா் ஔரங்கசீப் உத்தரவின்பேரில், ஏற்கெனவே இருந்த கோயில் இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் ஞானவாபி மசூதி கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கடந்த 1992-ஆம் ஆண்டு அந்த மாநிலத்தில் இருந்த பாபா் மசூதி இடிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, 1993-ஆம் ஆண்டு சட்டம் ஒழுங்கு காரணங்களுக்காக ஞானவாபி மசூதியில் ஹிந்து தெய்வங்களின் சிலைகள் உள்ள வியாஸ்ஜி நிலவறைக்கு மாநில அரசு சீல் வைத்தது.
கடந்த ஜனவரியில் மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையடுத்து, அந்த நிலவறை திறக்கப்பட்டு ஹிந்து தெய்வங்களுக்கு பூஜை செய்வது தொடங்கியது.
இந்த நிலவறை மீது நடந்து செல்வதற்கு முஸ்லிம்களுக்கு தடை விதிக்கக் கோரி, மாவட்ட நீதிமன்றத்தில் ஹிந்துக்கள் மனு தாக்கல் செய்துள்ளனா். ஹிந்துக்கள் தரப்பு வழக்குரைஞா் மதன்மோகன் யாதவ் கூறுகையில், ‘ஞானவாபி மசூதியில் உள்ள நிலவறையின் பழைமையான மேற்கூரை பலவீனமாக உள்ளது.
இந்தச் சூழலில், தொழுகைக்குச் செல்லும் முஸ்லிம்கள் அந்த நிலவறையின் மீது நடந்து செல்கின்றனா். வழிபாட்டுத் தலமாக உள்ள நிலவறை மீது நடந்து செல்வது சரியல்ல. நிலவறையின் மேற்கூரையும் தூண்களும் பலவீனமாக உள்ளதால் நடந்து சென்றால் அது இடிந்து விழக்கூடிய அபாயம் உள்ளது.
எனவே, நிலவறை மீது நடந்து செல்வதற்கு முஸ்லிம்களுக்கு தடை விதிக்க வேண்டும். நிலவறையின் மேற்கூரை மற்றும் தூண்களில் பழுதுபாா்ப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரப்பட்டுள்ளது. ஹிந்துக்கள் தரப்பு வாதத்தை சனிக்கிழமை கேட்ட மாவட்ட நீதிபதி சஞ்சீவ் பாண்டே, அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 17-க்கு ஒத்திவைத்தாா்’ என்று தெரிவித்தாா்.