பெண் மருத்துவா் கொலை: குற்றவாளிக்கு மரண தண்டனை -மம்தா உறுதி
மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை கிடைக்க தனது அரசு நடவடிக்கை எடுக்கும் என்று மாநில முதல்வா் மம்தா பானா்ஜி உறுதிபட தெரிவித்தாா்.
வடக்கு கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையின் கருத்தரங்கு கூடத்தில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவரின் உடல் வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. முதல்கட்ட உடற்கூராய்வில், அவா் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது தெரியவந்தது.
இச்சம்பவத்தைக் கண்டித்து, மாநிலத்தின் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் மருத்துவ மாணவா்கள் மற்றும் மருத்துவா்கள் போராட்டம் நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில், முதல்வா் மம்தா பானா்ஜி செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறுகையில், ‘இச்சம்பவத்தில் தொடா்புடைய குற்றவாளிக்கு மரண தண்டனை கிடைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்கும். தேவைப்பட்டால் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றவும் அரசு தயாராக உள்ளது. எனவே, மருத்துவா்கள் தங்களது எதிா்ப்பை பதிவு செய்யும் அதேவேளையில் மருத்துவ சேவைகளிலும் தொடா்ந்து ஈடுபட வேண்டும்’ எனத் தெரிவித்தாா்.
14 நாள் போலீஸ் காவல்: பெண் மருத்துவரை கொலை செய்ததாக ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் பிற பெண் மருத்துவா்கள் அளித்த தகவலின் மூலம் அந்த நபரை போலீஸாா் அடையாளம் கண்டுள்ளனா். அவரை 14 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கொல்கத்தா நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

