
கன்னட நடிகர் தர்ஷனுக்கு சிறையில் சலுகைகள் அளிக்கப்பட்ட விவகாரத்தில் 7 சிறை அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கன்னட நடிகா் தா்ஷன் தனது ரசிகா் ரேணுகாசாமியை(34) கொலை செய்த வழக்கில், தர்ஷன் மற்றும் அவரது தோழி நடிகை பவித்ரா கௌடா உள்ளிட்ட 17 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இந்த வழக்கில் தர்ஷன் நீதிமன்றக் காவலில் உள்ளார். இதனிடையே நடிகர் தர்ஷன் தூகுதீபா சிறை வளாகத்தில் திறந்தவெளியில் நாற்காலியில் அமர்ந்தபடி கையில் சிகரெட்டை பிடித்தபடி தேநீர் பருகுவது போன்ற புகைப்படம் வெளியானது.
மேலும் அவருக்கு அருகே ரௌடி வில்சன் கார்டன் நாகா மற்றும் தர்ஷனுடைய மேலாளாராக பணிபுரிந்த நாகராஜ் ஆகியோர் அமர்ந்துகொண்டு அரட்டையடிக்கும் காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக, உயிரிழந்த ரேணுகாசாமியின் தந்தை காஷிநாத் எஸ். ஷிவானாகௌத்ரு கூறியிருப்பதாவது, “ரேணுகாசாமி கொலை வழக்கில் காவல்துறை மீது நம்பிக்கை இருந்தது. ஆனால், இந்த புகைப்படத்தை கண்டபின், சிபிஐ விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுதொடர்பாக முழு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்” என்றார். இந்த நிலையில் கன்னட நடிகர் தர்ஷனுக்கு சிறையில் சலுகைகள் அளிக்கப்பட்ட விவகாரத்தில் 7 சிறை அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இடைநீக்கம் குறித்து கருத்து தெரிவித்த உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா, சிறைத் துறை தலைமை இயக்குனரிடம் பேசியதாகவும், விசாரணை தொடங்கப்பட்டுவிட்டதாகவும் கூறினார்.
மேலும் இவ்விவகாரத்தில் சிறைக் கண்காணிப்பாளர் உட்பட மூத்த அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் பரமேஸ்வரா கூறுகையில், “கிட்டத்தட்ட மாலை 4.30 மணியளவில், தர்ஷன், மேலும் மூவருடன் தேநீர் அருந்திக்கொண்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்ததாக எனக்குத் தகவல் கிடைத்தது.
நான் சிறைத் துறை டிஜிபியிடம் பேசி அதிகாரிகளை சம்பவ இடத்திற்கு அனுப்பினேன். நள்ளிரவு 1 மணிக்கு மேல் விசாரணை நடத்தப்பட்டது,'' என்றார். “இது நடந்திருக்கக் கூடாது. ஏழு அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர், மேலும் சிறை கண்காணிப்பாளர் உட்பட சில மூத்த அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவார்கள், ”என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.