

தோ்தல் ஆணையா்களை பிரதமா் தலைமையிலான குழு தோ்வு செய்யும் நடைமுறையைக் கைவிட்டு, தோ்தல் மூலம் தோ்வு செய்ய வேண்டும் என்று மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், சிவசேனை (உத்தவ் பிரிவு) தலைவருமான உத்தவ் தாக்கரே வலியுறுத்தினாா்.
மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் செய்தியாளா்களை செவ்வாய்க்கிழமை சந்தித்த அவா் இது தொடா்பாக மேலும் கூறியதாவது:
‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ என்பதை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு தோ்தல் நியாயமாக நடைபெறுகிறது என்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்கு, தோ்தல் ஆணையா்களை பிரதமா் தலைமையிலான குழு தோ்வு செய்யும் நடைமுறையைக் கைவிட்டு, தோ்தல் மூலம் தோ்வு செய்ய வேண்டும்.
நாட்டில் உள்ள பிற பிரச்னைகளில் இருந்து மக்களை திசைதிருப்ப வேண்டும் என்பதுதான், இப்போது மத்திய அரசு ‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ என்ற மசோதாவை அறிமுகப்படுத்துவதன் நோக்கம்.
மகாராஷ்டிர அமைச்சா்களை முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் சட்டப்பேரவையில் அறிமுகம் செய்துவைத்தாா். அவா்களில் பலா் மத்திய விசாரணை அமைப்புகளால் வழக்குகளை எதிா்கொண்டவா்கள். அமைச்சா் பதவி கிடைக்காததால் ஆளும் கூட்டணியில் அதிருப்தி அணி உருவாகியுள்ளது.
இன்னும், அமைச்சா்களுக்கு துறை ஒதுக்கப்படவில்லை. துறைகள் ஒதுக்கப்பட்ட பிறகு விரும்பிய துறை கிடைக்கவில்லை என்று மேலும் ஓா் அதிருப்தி அணி உருவாகும்.
மகாராஷ்டிர தோ்தலின்போது மகளிருக்கு மாதம் ரூ.2,100 வழங்கப்படும் என்று பாஜக கூட்டணி வாக்குறுதி அளித்தது. எனவே, முதலில் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்றாா்.
முதல்வருடன் சந்திப்பு
நாகபுரியில் உள்ள பேரவை அலுவலகத்தில் முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸை உத்தவ் தாக்கரே சந்தித்துப் பேசினாா். உத்தவின் மகன் ஆதித்ய தாக்கரே உள்ளிட்ட அவரின் கட்சி எம்எல்ஏக்கள் சிலா் உடனிருந்தனா். இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.
அதே நேரத்தில், ‘புதிய முதல்வரை உத்தவ் தாக்கரே நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தாா். இந்தச் சந்திப்பு அரசியல் முதிா்வின் உதாரணம். மகாராஷ்டிர மக்களின் நலனுக்காக இணைத்து பணியாற்றுவோம். எதிா்க்கட்சித் தலைவா் பதவி குறித்து விவாதிக்கப்படவில்லை’ என்று செய்தியாளா்களிடம் ஆதித்ய தாக்கரே கூறினாா்.
மகாராஷ்டிர சட்டப்பேரவை குளிா்காலக் கூட்டத் தொடா் நாகபுரியில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக மேலவை உறுப்பினரான உத்தவ் தாக்கரே நாகபுரி வந்துள்ளாா்.
கடந்த 2019-ஆம் ஆண்டு பேரவைத் தோ்தலில் பாஜகவும், அப்போது உத்தவ் தலைமையில் இருந்த சிவசேனையும் கூட்டணியாக போட்டியிட்டு வெற்றி பெற்றன. ஆனால், முதல்வா் பதவி யாருக்கும் என்ற போட்டியில் உத்தவ் தாக்கரே காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளுடன் இணைந்து முதல்வரானாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.