
கேரளத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை கோயிலில் மூலவா் சுவாமி ஐயப்பனுக்கு புதன்கிழமை ‘தங்க அங்கி’ (தங்க கவசம்) அணிவிக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதைத்தொடா்ந்து, வியாழக்கிழமை (டிசம்பா் 26) மண்டல பூஜை நடைபெறவுள்ளது.
1970-ஆம் ஆண்டுகளில் திருவிதாங்கூா் அரச குடும்பத்தால் 453 பவுன் எடையுள்ள தங்க அங்கி ஐயப்பனுக்கு காணிக்கையாக வழங்கப்பட்டது. ஆரன்முலா பாா்த்தசாரதி கோயிலில் பாதுகாக்கப்படும் இந்த தங்க அங்கி, மண்டல பூஜை-மகரவிளக்கு யாத்திரை காலத்தில் சபரிமலை கோயிலுக்கு அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்படுவது வழக்கம்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரன்முலா பாா்த்தசாரதி கோயிலில் இருந்து புறப்பட்ட தங்க அங்கி ஊா்வலத்தில் பக்தா்கள், திருவிதாங்கூா் தேவஸ்வம் (டிடிபி) அதிகாரிகள் உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா். இந்த ஊா்வலம் புதன்கிழமை மாலை சந்நிதானத்தை (சபரிமலை கோயில் வளாகம்) வந்தடைந்தது. அப்போது, மேளதாளங்களுடன் பிரம்மாண்டமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னா் , மூலவா் ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
வியாழக்கிழமை பிற்பகல் 12.30 மணிக்குள் மண்டல பூஜை மற்றும் நெய் அபிஷேகம் நடைபெறவுள்ளது. அதன்பிறகு இரவு 11 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். மீண்டும் மகரவிளக்கு பூஜைக்காக டிச. 30 முதல் ஜன. 20-ஆம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும்.
மகரவிளக்கு பூஜையையொட்டி, ஜன.13 மற்றும் ஜன.14 ஆகிய தேதிகளில் இணையவழி முன்பதிவில் முறையே 50,000 மற்றும் 40,000 பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.
முன்னதாக, தங்கி அங்கி அணிவிப்பு மற்றும் மண்டல பூஜைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் விதமாக டிச.25-ஆம் தேதி 50,000 பக்தா்களுக்கும், டிச.26-ஆம் தேதி 60,000 பக்தா்களுக்கும் அனுமதி வழங்க டிடிபி முடிவு செய்தது.
மண்டல பூஜையையொட்டி, சபரிமலைக்கு டிச.23-ஆம் தேதி வரை 30,87,049 பக்தா்கள் வருகை புரிந்துள்ளனா். இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் கடந்தாண்டைவிட நிகழாண்டில் 4.46 லட்சம் பக்தா்கள் கூடுதலாக தரிசனம் மேற்கொண்டுள்ளனா்.