தொடரும் விவசாயிகள் போராட்டம்: தில்லியில் காய்கறி விலை உயரும் அபாயம்!

ஐந்தாவது நாளாக தொடரும் விவசாயிகளின் போராட்டத்தால் தில்லியில் காய்கறி விலை உயரக்கூடும்
தொடரும் விவசாயிகள் போராட்டம்: தில்லியில் காய்கறி விலை உயரும் அபாயம்!

புது தில்லி: ஐந்தாவது நாளாக தொடரும் விவசாயிகளின் போராட்டத்தால் தில்லியில் காய்கறி விலை உயரக்கூடும் என்று காஜிபூர் சந்தை வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

பிரதமா் மோடி அரசு, கடந்த 2020-ஆம் ஆண்டில் 3 வேளாண் சட்டங்களை கொண்டுவந்தபோது, விவசாயிகள் சுமாா் ஓராண்டுக்கு போராட்டம் நடத்தினா். இதையடுத்து, அந்தச் சட்டங்களை திரும்பப் பெற்ற மத்திய அரசு, விவசாயிகளுக்கு பல்வேறு வாக்குறுதிகள் அளித்தது. ஆனால், அந்த வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. வேளாண் ஆராய்ச்சியாளா் எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கை மீது கடந்த 2014-ஆம் ஆண்டிலிருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதையடுத்து சம்யுக்தா கிசான் மோர்ச்சா (அரசியல் சாராதது) மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகியவை தங்களது கோரிக்கைகளை ஏற்க பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க "போராட்டத்திற்கு" அழைப்பு விடுத்தது. பஞ்சாபிலிருந்து விவசாயிகள் செவ்வாய்க்கிழமை(பிப்.13) தலைநகர் தில்லி நோக்கி டிராக்டர் பேரணியை திங்கள்கிழமை தொடங்கினர், ஆனால் பஞ்சாப் மற்றும் ஹரியாணா இடையேயான எல்லையில் உள்ள நுழைவுவாயில் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

தில்லியில் பிப்ரவரி 13 ஆம் தேதி செவ்வாய்கிழமை முதல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஐந்தாவது நாளாக போராட்டம் தொடரும் நிலையில், காய்கறிகளின் விலையும் அதிகரிக்கக் கூடும் என வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

பஞ்சாபில் இருந்து காய்கறிகள் வரத்து பிரச்னை காரணமாக கடந்த 15 நாள்களாக கேரட் விலை கிலோவுக்கு ரூ.4 உயர்ந்துள்ள நிலையில், விவசாயிகளின் தொடர் போராட்டங்களினால் அனைத்து காய்கறிகளின் விலையும் அதிகரிக்கக் கூடும்.

இதுகுறித்து காஜிபூர் சந்தை காய்கறி வியாபாரி கூறுகையில், "விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து பஞ்சாபில் இருந்து காய்கறிகள் வரத்து தடைபட்டதால் கடந்த 15 நாள்களில் கேரட் விலை கிலோவுக்கு ரூ.4 உயர்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பிற காய்கறிகளின் விலையும் உயரும் அபாயம் உள்ளது. எனவே விவசாயிகளும் அரசாங்கமும் விரைவில் நல்ல முடிவுக்கு வர வேண்டும் என தெரிவித்தார்.

விவசாயிகள் போராட்டம் காரணமாக சாலை மறியல் காரணமாக காய்கறிகளின் விலையில் ஏற்படும் பாதிப்பு குறித்து தில்லியின் காஜிபூர் சந்தையின் மற்றொரு காய்கறி வியாபாரி கூறுகையில், "காய்கறிகளின் விலையில் தற்போதுவரை எந்த பாதிப்பும் இல்லை. போராட்டங்கள் தொடர்ந்தால் சாலை மறியல் அதிகமாகும். பின்னர், உ.பி., கங்காநகர், புணே போன்ற இடங்களில் இருந்து வரும் காய்கறிகளின் வரத்து பாதிக்கப்படக் கூடும். இதன் காரணமாக அனைத்து காய்கறிகளின் விலை உயரும் வாய்ப்பு உள்ளது" என்று கூறினார்.

பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலுக்கு இடையே,வியாழக்கிழமை மத்திய அரசுடன் நடைபெற்ற மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மீண்டும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com