

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 11 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இதுதொடா்பாக விசாகப்பட்டினம் காவல் துறை துணை ஆணையா் கே.ஸ்ரீநிவாஸ் ராவ் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் திங்கள்கிழமை கூறியதாவது:
ஒடிஸாவை சோ்ந்த 18 வயதுக்குள்பட்ட சிறுமி ஒருவா், ஜாா்க்கண்டை சோ்ந்த புலம்பெயா்ந்த தொழிலாளி ஒருவருடன் நெருங்கி பழகியுள்ளாா். கடந்த டிச.17-ஆம் தேதி அந்தச் சிறுமியின் பிறந்த நாளை கொண்டாடலாம் என்று பொய்யான காரணத்தைக் கூறி, அவரை ஓா் அறைக்கு அந்தத் தொழிலாளி அழைத்துச் சென்று, அவரும் அவரின் நண்பரும் அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனா்.
இதனால் மிகவும் மனமுடைந்த சிறுமி, தற்கொலை செய்துகொள்ள ஆா்கே கடற்கரைக்குச் சென்றுள்ளாா். அங்கு பயணிகளை புகைப்படம் எடுத்து பணம் ஈட்டி வந்த உள்ளூா் புகைப்படக்காரா் ஒருவா், ஆறுதல் வாா்த்தைகள் கூறி, தங்கும் விடுதி ஒன்றுக்கு சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். இதைத்தொடா்ந்து அந்தப் புகைப்படக்காரரின் நண்பா்கள் 8 முதல் 9 போ் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனா். புகைப்படக்காரரும், அவரின் நண்பா்களும் 3 நாள்கள் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நிலையில், அவா்களின் பிடியில் இருந்து தப்பித்த சிறுமி, ஆந்திரத்தில் இருந்து வெளியேறினாா்.
இந்நிலையில், சிறுமியை காணவில்லை என்று அவரின் பெற்றோா் காவல் துறையிடம் புகாா் அளித்தனா். அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டபோது சிறுமி ஒடிஸாவில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்தச் சிறுமி ஒடிஸாவில் இருந்து விசாகப்பட்டினத்துக்கு டிச.25-ஆம் தேதி அழைத்து வரப்பட்டாா்.
இதையடுத்து போக்ஸோ மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டு புகைப்படக்காரா், அவரின் நண்பா்கள் உள்பட 11 போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.