ஹரியாணாவின் ஃபரீதாபாத்தில் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் நாளை (ஜன.17) சர்வதேச அறிவியல் திருவிழா தொடங்கவுள்ளது.
நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்கள் கலந்துகொள்ளும் இந்த விழா நான்கு நாட்களுக்கு நடைபெற உள்ளது.
இந்த நான்கு நாள் நிகழ்வில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஜிதேந்திர சிங், இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத், முதன்மை அறிவியல் ஆலோசகர் அஜய் குமார் சூட், அறிவியல் துறை செயலாளர்கள் அபய் கராந்திகர், ராஜேஷ் கோகலே, எம்.ரவிச்சந்திரன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
இந்த நிகழ்வில் 150 மீட்டர் உயரத்தில் பாரா-மோட்டார்களைப் பயன்படுத்தி வானிலை அவதானிப்புகளை மேற்கொள்ளும் மைக்ரோ செயற்கைக்கோளை பள்ளி மாணவர்கள் தயாரிக்க உள்ளனர் என்று ஐஐஎஸ்எஃப் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் ரானடே தெரிவித்தார்.
"இந்த அறிவியல் திருவிழாவின் நோக்கம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் சாதனைகளைக் கொண்டாடுவது, அறிவியல் ஆர்வலர்களின் சாதனைகளை அங்கீகரிப்பது மற்றும் இளம் மாணவர்களிடையே அறிவியல் உணர்வை வளர்ப்பது மற்றும் அதை இந்திய குடிமக்களிடையே பரப்புவது" என்று இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை கூறுகிறது.
22 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் பங்கேற்கின்றனர்.
அறிவியல் கிராமம், விளையாட்டுகள் மற்றும் பொம்மைகள் மூலம் அறிவியல், மாணவர்களின் கண்டுபிடிப்பு விழா, ஸ்பேஸ் ஹேக்கத்தான் போன்ற பல்வேறு நிகழ்வுகள் இந்த திருவிழாவில் நடைபெற உள்ளது.
இந்த அறிவியல் திருவிழாவானது 2015 முதல் விஞ்ஞான பாரதி மற்றும் பல்வேறு அறிவியல் துறைகளால் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.