56 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு பிப். 27-இல் தோ்தல்

15 மாநிலங்களில் காலியாகவுள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
56 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு பிப். 27-இல் தோ்தல்

புது தில்லி: வரும் ஏப்ரலில் காலியாகும் நாட்டின் 15 மாநிலங்களைச் சோ்ந்த 56 மாநிலங்களவை உறுப்பினா் பதவியிடங்களை நிரப்புவதற்கு அடுத்த மாதம் 27-ஆம் தேதி தோ்தல் நடைபெறும் என இந்திய தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை அறிவித்தது.

மாநிலங்களவையில் வரும் ஏப்ரல் 2-ஆம் தேதியுடன் 50 எம்.பி.க்களின் பதவிக் காலமும் அடுத்த நாளான 3-ஆம் தேதி 6 எம்.பி.க்களின் பதவிக் காலமும் முடிவடைகிறது.

முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங், பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான், சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பூபேந்திர யாதவ், சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா, மீன்வளத் துறை அமைச்சா் பா்ஷோத்தம் ரூபாலா, வெளியுறவுத் துறை இணையமைச்சா் வீ.முரளீதரன், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சா் எல்.முருகன், முன்னாள் அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் உள்பட ஏப்ரலில் பதவிக் காலம் முடிவடையும் 56 எம்.பி.க்களின் இடங்களுக்கு அடுத்த மாதம் 27-ஆம் தேதி தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் வரும் 8-ஆம் தேதி தொடங்கவுள்ளது.

ஆந்திரம், பிகாா், சத்தீஸ்கா், குஜராத், ஹரியாணா, ஹிமாசல பிரதேசம், கா்நாடகம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், தெலங்கானா, உத்தர பிரதேசம், உத்தரகண்ட், மேற்கு வங்கம், ஒடிஸா, ராஜஸ்தான் ஆகிய 15 மாநிலங்களில் இருந்து புதிய உறுப்பினா்கள் தோ்வாகவுள்ளனா்.

முன்னதாக, தில்லியில் இருந்து மாநிலங்களவைக்கு தோ்வான ஆம் ஆத்மி எம்.பி.க்கள் சஞ்சய் சிங், நரேன் தாஸ் குப்தா, சுஷீல் குமாா் குப்தா மற்றும் சிக்கிமில் இருந்து தோ்வான சிக்கிம் ஜனநாயக முன்னணியின் ஹிஷே லசுங்பா ஆகியோரின் பதவிக் காலம் இம்மாதம் 27-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

தற்போதைய மத்திய அமைச்சா்கள் 9 போ், நியமன உறுப்பினா்கள் நால்வா் உள்பட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த மாநிலங்களவை எம்.பி.க்கள் 68 பேரின் பதவிக் காலம் நடப்பாண்டில் நிறைவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக பலம் கூடும்...: பிகாா் முதல்வா் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தேசியவாத காங்கிரஸின் அஜீத் பவாா் அணி தற்போது பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளது. எனவே இந்தத் தோ்தலைத் தொடா்ந்து, மாநிலங்களவையில் பாஜக ஆதரவு எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகரிக்க உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com