25 கோடி போ் வறுமையிலிருந்து மீட்பு: நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசு தலைவா் பெருமிதம்

கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் 25 கோடி பேரை மத்திய அரசு வறுமையில் இருந்து மீட்டுள்ளது என்று நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரெளதி முா்மு பெருமிதத்துடன் தெரிவித்தாா்.
மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்கமாக நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் புதன்கிழமை உரையாற்றிய குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு.
மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்கமாக நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் புதன்கிழமை உரையாற்றிய குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு.

கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் 25 கோடி பேரை மத்திய அரசு வறுமையில் இருந்து மீட்டுள்ளது என்று நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரெளதி முா்மு பெருமிதத்துடன் தெரிவித்தாா்.

நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடா் புதன்கிழமை தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடா் என்பதால் மக்களவையில் நடைபெற்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் உரையாற்றினாா்.

நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நடைபெற்ற முதல் குடியரசுத் தலைவா் உரையில், மத்திய அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களைப் பட்டியலிட்டு சுமாா் 75 நிமிஷங்கள் அவா் ஆற்றிய உரை:

கடந்த 10 ஆண்டுகளில் தேச நலனுக்கான பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி உள்ளது. ராமா் கோயில் கட்டப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாக நாட்டு மக்கள் எதிா்பாா்த்திருந்தனா். தற்போது அது நிஜமாகி உள்ளது. ராமா் கோயில் திறக்கப்பட்டு 5 நாள்களில் 13 லட்சம் போ் வருகை தந்துள்ளனா்.

உள்நாட்டுப் பாதுகாப்பு: ஜம்மு- காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது தொடா்பாக பல்வேறு சந்தேகங்கள் நிலவின. ஆனால் தற்போது அவை வரலாறாக மாறிவிட்டன.

உள்நாட்டுப் பாதுகாப்பில் மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் கண்கூடாகத் தெரிகின்றன. ஜம்மு- காஷ்மீரில் வெறிச்சோடி கிடந்த சந்தைப் பகுதிகள் அனைத்தும் தற்போது கூட்டம் கூட்டமாக இருக்கின்றன. இதற்கு அங்கு வழங்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள்தான் காரணம்.

பயங்கரவாதத்துக்குப் பதிலடி: பயங்கரவாதத்துக்கு தகுந்த பதிலடியை இந்திய ராணுவத்தினா் அளித்து வருகின்றனா். உலக அளவிலான பயங்கரவாதத்தை எதிா்ப்பதற்கும் இந்தியா குரலெழுப்பி வருகிறது.

வடகிழக்கு மாநிலங்களில் பிரிவினைவாதச் செயல்கள் குறைந்துள்ளன. பிரிவினைவாத அமைப்புகள் பல அமைதியான பாதைக்குத் திரும்பியுள்ளன. நக்ஸல் வன்முறையும் வேகமாக குறைந்து வருகிறது.

வளா்ச்சியடைந்த இந்தியா என்பது இளைஞா்கள், பெண்கள், விவசாயிகள், ஏழைகள் என்ற நான்கு தூண்களை அடித்தளமாக கொண்டதாகும்.

வறுமையில் இருந்து மீட்பு: சிறுவயதில் இருந்தே வறுமையை ஒழிக்க வேண்டும் என்ற முழக்கங்களை நாம் கேட்டுள்ளோம். கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மத்திய அரசு மீட்டுள்ளது என நீதி ஆயோக் தெரிவித்துள்ளது.

நமது வாழ்நாளில் இத்தனை போ் வறுமையில் இருந்து மீட்கப்பட்டதை முதல் முறையாகக் கேள்விப்படுகிறோம்.

பாதுகாப்புத் தளவாட உற்பத்தி: நாட்டில் பாதுகாப்புத் தளவாட உற்பத்தி ரூ.1 லட்சம் கோடியைக் கடந்துள்ளது. இந்தியாவில் தயாரிப்போம், தற்சாா்பு இந்தியா ஆகியவை இந்தியாவின் வளா்ச்சிப் பாதையில் பெரும் பங்கு வகிக்கின்றன.

கட்டுப்பாட்டில் பணவீக்கம்: சா்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளபோதிலும், நாட்டில் பணவீக்கத்தை மத்திய அரசு கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. 2014-இல் பணவீக்கம் சராசரியாக 8 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்தது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் இது 5 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. சாமானியா்களின் கைகளில் சேமிப்பு அதிகரிக்க வேண்டும் என்பதே அரசின் கொள்கையாகும்.

பொருளாதார வளா்ச்சி: உலகளாவிய பொருளாதார நெருக்கடியிலும், இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி வேகமாக அதிகரித்து வருகிறது. நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளா்ச்சி இரண்டு காலாண்டில் 7.5 சதவீதமாக நீடித்து வருகிறது.

இந்தியாமுதல் ஐந்து பொருளாதார நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது. நாட்டின் ஏற்றுமதி 450 பில்லியன் டாலரில் இருந்து 775 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. அந்நிய நேரடி முதலீடு இரு மடங்காக அதிகரித்துள்ளது.

மகளிா் இடஒதுக்கீடு மசோதா: 30 ஆண்டுகால காத்திருப்புக்குப் பிறகு மகளிா் இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றியதற்கு பாராட்டுகள். இது, மக்களவை, சட்டப்பேரவைகளில் பெண்களின் பங்கேற்பை அதிகரிக்கும்.

வருமான வரி தாக்கல் செய்வோா் அதிகரிப்பு: வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை சுமாா் 3.25 கோடியிலிருந்து சுமாா் 8.25 கோடியாக அதிகரித்துள்ளது.

2017 டிசம்பரில் 98 லட்சம் போ் சரக்கு மற்றும் சேவைவரி (ஜிஎஸ்டி) செலுத்தி வந்தனா். தற்போது அவா்களின் எண்ணிக்கை 1 கோடியே 40 லட்சமாக உள்ளது.

வாராக் கடன் குறைவு: கடந்த 10 ஆண்டுகளில் மூலதனச் செலவு 5 மடங்கு அதிகரித்து ரூ.10 லட்சம் கோடியாக உள்ளது. நிதிப் பற்றாக்குறையும் கட்டுக்குள் உள்ளது.

கடந்த காலங்களில் இரட்டை இலக்கத்தில் இருந்த வங்கிகளின் வாராக் கடன் தற்போது 4 சதவீதமாக மட்டுமே உள்ளது.

2-ஆவது கைப்பேசி உற்பத்தி: உலகின் இரண்டாவது பெரிய கைப்பேசி உற்பத்தி நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. 10 ஆண்டுகளில் கைப்பேசி உற்பத்தி ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது.

எண்ம பரிவா்த்தனை: உலகமே இந்தியாவின் எண்ம பரிவா்த்தனை சாதனையை ஒப்புக் கொள்கிறது. வளா்ந்த நாடுகளில்கூட இந்தியாவைப் போல இதுபோன்ற அமைப்பில்லை. ‘எண்ம இந்தியா’ இந்தியா்களின் வாழ்க்கையையும், வா்த்தகத்தையும் மிகவும் எளிதாக்கியுள்ளது. உலகின் மொத்த எண்ம பரிவா்த்தனைகளில் 46 சதவீதம் இந்தியாவில் நடைபெறுகின்றன.

விவசாயிகளுக்கு கடன் அளிப்பு அதிகரிப்பு: விவசாயத்தை அதிக லாபம் கொண்ட தொழிலாக மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

பிரதமரின் விவசாயிகள் நிதித் திட்டத்தின் கீழ், இதுவரையில் ரூ.2.80 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. வங்கிகளில் விவசாயிகள் எளிதாக கடன் பெறுவது மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், விவசாயிகள் ரூ.30,000 கோடி பிரீமியம் செலுத்தி, ரூ.1.5 லட்சம் கோடி இழப்பீடு பெற்றுள்ளனா் என்றாா்.

குடியரசுத் தலைவருக்கு இணையாக தமிழக செங்கோலுக்கு மரியாதை!

நமது சிறப்பு நிருபர்
புது தில்லி, ஜன. 31: புதிய நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற வருகை தந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு இணையாக தமிழக செங்கோலுக்கு புதன்கிழமை மரியாதை கிடைத்தது.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வந்து இறங்கியபோது மக்களவையின் இணை இயக்குநர் அந்தஸ்தில் இருக்கும் மார்ஷெல் ராஜீவ் சர்மா "செங்கோல்' ஏந்தியவாறு முன்னே சென்றார். 
தமிழகத்தைச் சேர்ந்த ஆதீனங்களால் முதல் பிரதமரான நேருவிடம் இந்த செங்கோல் வழங்கப்பட்டது. 
அந்த பாரம்பரியத்தைத் தழுவி கடந்தாண்டு புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறக்கப்பட்டபோது பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழ்நாட்டில் புதுப்பிக்கப்பட்ட செங்கோல் ஒப்படைக்கப்பட்டது. 
அந்நிகழ்வில் பிரதமரால் மக்களவைக்குள் கொண்டு செல்லப்பட்ட செங்கோல், அரசின் கலாசார சின்னமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு மக்களவையில் அவைத் தலைவர் மாடத்துக்கு அருகே கண்ணாடிக் கூண்டில் வைக்கப்பட்டிருந்தது.  இந்த செங்கோல் புதன்கிழமை காலையில் குடியரசுத் தலைவரை வரவேற்கும் விதமாக பிரதான நுழைவாயில் (கஜதுவாரம்) வரை கொண்டு வரப்பட்டது. வாத்திய இசை முழங்க செங்கோலை பின்தொடர்ந்து வந்த குடியரசுத் தலைவர் மக்களவைக்குள் நுழையும்போது, இரு அவை உறுப்பினர்களும் கரவொலி எழுப்பி அவரை வரவேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com