
கர்நாடகத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் சி மற்றும் டி பிரிவு பணியிடங்களை 100 சதவிகிதம் கன்னட மக்களுக்கு கட்டாய இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு அம்மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
மேலும், தனியார் நிறுவனங்களில் உள்ள மேலாளர் போன்ற நிர்வாக பணிகளில் 50 சதவிகிதமும், நிர்வாகம் அல்லாத பிற பணிகளில் 75 சதவிகிதமும் கன்னட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் அல்லது 15 ஆண்டுகளுக்கு மேல் கர்நாடகத்தில் வசித்து கன்னட மொழி நன்றாக எழுத, படிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே இந்த இடஒதுக்கீட்டில் பணி வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இடஒதுக்கீட்டை மீறும் தனியார் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த மசோதாவை விரைவில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து சட்டமாக நிறைவேற்றவுள்ளனர்.
இருப்பினும், இந்த சட்டத்தை அமல்படுத்துவது கடினம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏனெனில், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஏற்கெனவே இதுபோன்ற சட்டங்கள் இயற்றப்பட்ட நிலையில், இந்தியர்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று நீதிமன்றங்களால் ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.