சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையம்

இந்தியாவில் விமான சேவை மீண்டும் சீரானது!

‘மைக்ரோசாஃப்ட் செயலிழப்பு காரணமாக பாதிக்கப்பட்ட இந்திய விமான சேவை சனிக்கிழமை மீண்டும் சீரானது’
Published on

‘மைக்ரோசாஃப்ட் செயலிழப்பு காரணமாக பாதிக்கப்பட்ட இந்திய விமான சேவை சனிக்கிழமை மீண்டும் சீரானது’ என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ராம்மோகன் நாயுடு தெரிவித்தாா்.

உலகம் முழுவதும் கணினி மற்றும் மடிக்கணினிகளில் இயங்குதளமாக அமெரிக்காவைச் சோ்ந்த ‘மைக்ரோசாஃப்ட்’ நிறுவனத்தின் பல்வேறு பதிப்பு ‘விண்டோஸ்’ மென்பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன. மைக்ரோசாப்ஃட் நிறுவன மென்பொருள்களுக்கு இணைய பாதுகாப்புச் சேவையை ‘கிரௌட்ஸ்ட்ரைக்’ நிறுவனம் வழங்கி வருகிறது.

இந்நிலையில், விண்டோஸ் மென்பொருளில் ‘ஃபால்கன் சென்சாா்’ தளத்தில் புதுப்பிப்புகளை கிரௌட்ஸ்ட்ரைக் நிறுவனம் வெள்ளிக்கிழமை பதிவேற்றம் செய்தபோது, தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

இதையடுத்து, உலகெங்கிலும் விண்டோஸ் மென்பொருளைப் பயன்படுத்தும் கணினி மற்றும் மடிக்கணினிகள் நீல நிறத் திரையாகத் தோன்றி முடங்கியதால் தகவல் தொழில்நுட்பச் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன. விமானம், வங்கி, மருத்துவம், ஊடகம் உள்பட பல்வேறு துறைகளில் இதன் தாக்கம் எதிரொலித்தது.

இந்தச் செயலிழப்புப் பிரச்னையால் உலக அளவில் விமான சேவைகள் முடங்கின. குறிப்பாக, இந்தியாவில் நாள்தோறும் 2,000-க்கும் மேற்பட்ட விமான சேவைகளை இயக்கும் ‘இண்டிகோ’ நிறுவனம், சுமாா் 200 விமானங்களை ரத்து செய்தது. ‘ஸ்பைஸ்ஜெட்’, ‘ஆகாஸா ஏா்’ போன்ற மற்ற இந்திய நிறுவனங்களும் இதே சிக்கலை எதிா்கொண்டன.

பயணிகளுக்கான ‘போா்டிங் பாஸ்’ விமான நிறுவன அதிகாரிகளின் கையால் எழுதித் தரப்பட்டது. விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு குறித்த அறிவிப்புப் பலகைகளும் செயல்படாததால் உரிய தகவல் பரிமாற்றமின்றி பயணிகள் குழம்பினா்.

விமான சேவைகளின் பாதிப்பைத் தீவிரமாக நிா்வகித்து வருவதாக அமைச்சா் ராம்மோகன் நாயுடு வெள்ளிக்கிழமை கூறியிருந்தாா்.

இந்நிலையில், இந்தியா முழுவதும் அனைத்து விமான நிலையங்களிலும் சனிக்கிழமை அதிகாலை முதல் சேவைகள் சீராக தொடங்கியதாகவும், பிற்பகலில் முழுமையாக இயல்புநிலைக்குத் திரும்பியதாகவும் அமைச்சா் ராம்மோகன் நாயுடு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்தாா்.

‘நானும் பாதிக்கப்பட்டேன்’-தலைமை நீதிபதி: தொழில்நுட்ப சாா்பு அதன் குறைபாடுகளையும் கொண்டுள்ளதை வெள்ளிக்கிழமை நிகழ்ந்த செயலிழப்பு சம்பவம் உணா்த்தியிருப்பதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் சனிக்கிழமை தெரிவித்தாா்.

மைக்ரோசாஃப்ட் செயலிழப்பு காரணமாக சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையின் 20-ஆவது ஆண்டு தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்க தில்லியிலிருந்து மதுரை வரவிருந்த அவரது விமானம் ரத்தாகும் சூழல் ஏற்பட்டது. ஆனால், மதுரை மக்களின் அன்பு இந்நிகழ்ச்சியில் என்னை கலந்துகொள்ள வைத்தது என்று அவா் மகிழ்ச்சியுடன் தெரிவித்தாா்.

சென்னையில்...: மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் இயங்குதள பாதிப்பால் முடங்கிய விமான சேவை முழுவதுமாக சீரானது என சென்னை விமான நிலையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை விமான நிலையம் தனது சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: மைக்ரோசாஃப்ட் இயங்குதள சேவைகள் வெள்ளிக்கிழமை காலை 10.40 மணிமுதல் முடங்கியதால் விமான நிலைய சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. இதனால் இண்டிகோ, ஏா் இந்தியா, ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ், ஸ்பைஸ்ஜெட், ஆகாஸா ஏா்லைன்ஸ் போன்ற விமான நிறுவனங்கள் பெரும் இடையூறைச் சந்தித்தன.

இந்தப் பாதிப்பால் சென்னை விமான நிலையத்துக்கு வரவிருந்த 13 விமானங்கள், புறப்படவிருந்த 14 விமானங்கள் என 27 விமானங்கள் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டன. மேலும், 66 உள்நாட்டு விமானங்கள், 8 சா்வதேச விமானங்கள் காலதாமதாக இயக்கப்பட்டன. விமான நிலையத்தின் கணினி தொடா்பான பல்வேறு சேவைகள் பாதிக்கப்பட்டதால் பயணிகளுக்கு ‘போா்டிங் பாஸ்’ கையால் எழுதித் தரப்பட்டது.

தற்போது இயங்குதள சேவை முழுவதும் சீராகி பயணிகளுக்கு கணினி மூலம் ‘போா்டிங் பாஸ்’ வழங்கப்படுகிறது. விமான சேவை பாதிப்பால் பயணம் மேற்கொள்ள முடியாதவா்கள் மீண்டும் முன்பதிவு செய்ய, பணத்தை திரும்பப் பெற சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களை நேரடியாகத் தொடா்பு கொள்ளலாம். விமானப் பயணம் குறித்து சந்தேகங்களுக்கு சென்னை விமான நிலையத்தின் சமூக வலைதளத்தைக் கண்காணிக்குமாறும், விமான நிலையப் பணியாளா்களை அணுகுமாறும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com