
அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் சைவ உணவுகள் மட்டுமே வழங்கப்படும் என அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா அறிவித்துள்ளார்.
மாவட்ட ஆணையர்களுக்கான இரண்டு நாள் மாநாட்டில் நேற்று (ஜூலை 29) பேசிய அஸ்ஸாம் முதல்வர் அரசு நிகழ்ச்சிகளை எளிமையாக நடத்த வேண்டும் என மாவட்ட ஆணையர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், ”நமது அரசு விஐபி கலாசாரத்தை ஒழிக்க வேண்டும். அரசு வாகனங்கள் மற்றும் பாதுகாப்புக்கான செலவுகளைத் தற்போது குறைத்து வருகிறோம்.
இனிமேல், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்ளும் அரசு நிகழ்ச்சிகள் உள்பட அனைத்திலும் சைவம் மற்றும் சாத்வீக உணவுகள் மட்டுமே வழங்கப்படும்” என அறிவித்துள்ளார்.
தங்கள் மாவட்டங்களை ’முழுமையான நிர்வாக மையமாக’ மாற்ற ஆணையர்களுக்கு வலியுறுத்திய முதல்வர், தங்கள் அதிகார வரம்பிற்குள் அரசு கட்டிடங்கள் கட்டப்படுவதை மேற்பார்வையிடவும், சுகாதாரம், கல்வி மற்றும் அங்கன்வாடி மையங்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கவும் மாவட்ட ஆணையர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும், வருகிற ஆகஸ்ட் 12 ஆம் தேதிக்குள் வெள்ளப் பாதிப்புகளுக்கான மறுவாழ்வு மானியங்களை வழங்கி முடிக்க அறிவுறுத்தினார்.
பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்துப் பேசிய அவர், தனது பாதுகாப்புக்கான வாகன அணிவகுப்பில் 10 வாகனங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.