
புது தில்லி: ஜாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்திய ராகுல் காந்தியின் ஜாதி குறித்து அனுராக் தாக்கூா் பேசியது அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், அதனை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ் அளித்துள்ளது.
பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வரும் மூத்த நாடாளுமன்ற உறுப்பினருமான சரண்ஜித் சிங் சன்னி, அவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட அனுராக் தாக்கூரின் பேச்சு அடங்கிய விடியோவை, தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் அந்தக் கடிதத்தில், அனுராக் தாக்கூரின் சர்ச்சைக்குரிய பேச்சு அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. ஆனால், அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட அனுராக் தாக்கூர் பேசும் விடியோவை, பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் முழு பேச்சையும் பகிர்ந்துள்ளார். மேலும் சர்ச்சைக்குரிய பல விஷயங்கள் அந்த பேச்சில் இடம்பெற்றுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் இந்த செயலானது முற்றிலும் அவையின் உரிமை மீறல் மற்றும் அவமதிப்பு செய்வதைக் குறிக்கிறது. எனவே, பிரதமர் மோடி மீது மக்களவை உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுலின் ஜாதி என்ன என்பது போன்று மக்களவையில் கேள்வி எழுப்பி பாஜக எம்.பி. அனுராக் தாக்கூரின் பேச்சு நேற்று சர்ச்சையாகி, அவைக் குறிப்பிலிருந்தும் நீக்கப்பட்டது.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, எனது இளமையான, துடிப்பான சக அமைச்சர் அனுராக் தாக்கூரின் இந்த பேச்சை கண்டிப்பாக கேளுங்கள். உண்மையான நிதர்சனம் மற்றும் நகைச்சுவையின் சரியான கலவையான, இந்தியா கூட்டணியின் மோசமான அரசியலை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்டு விடியோவையும் இணைத்திருந்தார்.
மக்களவையில் ஜாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி ராகுல் பேசும்போது, அதற்கு பதிலளித்த அனுராக் தாக்கூா், ‘ராகுல் உண்மையான ஹிந்து அல்ல’ என்று கூறி, அவரது ஜாதி குறித்து அனுராக் கேள்வி எழுப்பினாா். அனுராக்கின் பேச்சுக்கு எதிா்க்கட்சி உறுப்பினா்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மக்களவையில் அமளியைத் தொடா்ந்து ஜாதி குறித்த அனுராக் தாக்கூரின் கருத்து அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக அவையை வழிநடத்திய ஜகதாம்பிகா பால் அறிவித்திருந்தார்.
எனினும், அனுராக் தாக்கூரின் பேச்சு ஊடகங்களில் தலைப்புச்செய்தியாக மாறியது. மக்களவையில் அனுராக் தாக்கூர் பேச்குக்கு கண்டனம் தெரிவித்துப் பேசிய கன்னௌஜ் எம்.பி.யும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், மக்களவையில் எவ்வாறு ஒருவரின் ஜாதியைக் குறிப்பிட்டு பேசலாம் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில்தான், அனுராக் தாக்கூர் பேசும் விடியோவை, பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இணைத்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.