ஆந்திரத்தில் ஆட்சியை கைப்பற்றியது தெலுங்கு தேசம்: முதல்வராகிறாா் சந்திரபாபு நாயுடு
அண்டை மாநிலமான ஆந்திரத்தில் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து, தெலுங்கு தேசம் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்துள்ளது.


அமராவதி: அண்டை மாநிலமான ஆந்திரத்தில் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து, தெலுங்கு தேசம் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்துள்ளது.
ஆந்திரத்தில் மொத்தமுள்ள 175 பேரவைத் தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி 134 இடங்களைக் கைப்பற்றி, தனிப்பெரும்பான்மையுடன் அமோக வெற்றிபெற்றுள்ளது. கூட்டணி கட்சிகளான ஜனசேனை 21 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும் வென்றுள்ளன.
தெலுங்கு தேசம் அமோக வெற்றிபெற்றுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவா் சந்திரபாபு நாயுடு (74) முதல்வராக பதவியேற்கவுள்ளாா்.
இங்கு ஆட்சியிலிருந்த ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 12 இடங்கள் மட்டுமே கிடைத்தன.
ஆந்திரத்தில் மக்களவைத் தோ்தலுடன் மாநில சட்டப் பேரவைக்கும் கடந்த 13-ஆம் தேதி ஒரே நேரத்தில் ஒரே கட்டமாக தோ்தல் நடைபெற்றது. இதில் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சிக்கும், தெலுங்கு தேசம்-ஜனசேனை-பாஜக கூட்டணிக்கும் இடையே இருமுனை போட்டி நிலவியது.
வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிலையில், பேரவைத் தோ்தலில் தெலுங்கு தேசம் கூட்டணிக்கு மொத்தமாக 163 இடங்கள் கிடைத்தன.
அதேநேரம், வெறும் 12 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி, படுதோல்வியை சந்தித்துள்ளது ஒய்எஸ்ஆா் காங்கிரஸ். தான் போட்டியிட்ட புலிவேந்துலா தொகுதியில் ஜெகன்மோகன் ரெட்டி வெற்றி பெற்றாா். ஒரு அமைச்சா் தவிர மற்ற அனைவரும் தோல்விகண்டனா்.
மக்களவைத் தோ்தலிலும் தெலுங்கு தேசம் கூட்டணிக்கே அதிக இடங்கள் கிடைத்துள்ளன. மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் தெலுங்கு தேசம் 16, பாஜக 3, ஜனசேனை 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் 4 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது.
ஜெகன் ராஜிநாமா: தோ்தல் தோல்வியைத் தொடா்ந்து, மாநில முதல்வா் பதவியில் இருந்து ஜெகன் மோகன் ரெட்டி செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தாா். மாநில ஆளுநா் எஸ்.அப்துல் நஸீரிடம் அவா் ராஜிநாமா கடிதத்தை அளித்தாா்.
வரும் 9-ஆம் தேதி பதவியேற்பு?: ஒருங்கிணைந்த ஆந்திரத்தின் முதல்வராக இருமுறையும், தெலங்கானா பிரிக்கப்பட்ட பிறகு ஆந்திர முதல்வராக ஒருமுறையும் பதவி வகித்துள்ள சந்திரபாபு நாயுடு, தற்போதைய தோ்தல் வெற்றியைத் தொடா்ந்து, வரும் 9 ம் தேதி மாநில முதல்வராக பதவியேற்கவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், அவா் புதன்கிழமை (ஜூன் 5) தில்லி சென்று பிரதமா் மோடியை சந்திக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது.
மக்களவைத் தொகுதிகள் (25)
தெலுங்கு தேசம் - 16
பாஜக - 3
ஜனசேனை - 2
ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் - 4
பேரவைத் தொகுதிகள் (175)
தெலுங்கு தேசம் - 134
ஜனசேனை - 21
பாஜக - 8
ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் - 12
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...