

ஆந்திரத்தில் தல பொங்கல் கொண்டாட வருகைப்புரிந்த மாப்பிள்ளைக்கு 158 வகை உணவுகளுடன் மாமியார் வீட்டினர் விருந்து வைத்து அசத்தியுள்ளனர். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த முரளிகிருஷ்ணா தனது மனைவியுடன் சேர்ந்து, தல பொங்கல் (ஆந்திரத்தில் சங்கராந்தி) கொண்டாட வந்த மகளுக்கும் மருமகனுக்கும் ஆடம்பர விருந்து வைத்துள்ளனர்.
கோதாவரி மாவட்டம் ராஜமுந்திரி பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதத்தாவுக்கும் மெளனிகாவுக்கும் இடையே சமீபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்து முதல் சங்கராந்தி பண்டிகையை கொண்டாட தாய் வீட்டிற்கு தனது கணவருடன் மெளனிகா வருகைப்புரிந்துள்ளார்.
தல சங்கராந்தி என்பதால், மறக்க முடியாத அளவுக்கு இருக்க வேண்டும் என்பதற்காக மருமகனுக்காக மாமியார் வீட்டில் ஆடம்பரமாக உணவு தயார் செய்யப்பட்டுள்ளது.
சைவம், அசைவம் என இரு வகைகளிலும், இனிப்பு, காரம், பாரம்பரியம்மிக்க பலகாரங்கள் என 158 வகைகளில் இலையில் உணவு பரிமாறப்பட்டுள்ளது. இதில் ஆந்திரத்தைச் சேர்ந்த பழமைமாறாத உணவுப் பொருள்களும் இடம்பெற்றுள்ளன.
வாழை இலைகளில் 158 வகை உணவுகளை பரிமாறி மகளுடன் மருமகன் அமந்து சாப்பிடும் விடியோவை மாமியார் வீட்டினர் பகிர்ந்துள்ளனர். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.