உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் ரூ. 650 கோடியில் கோயில்களுக்கான அருங்காட்சியகம் அமைக்க டாடா சன்ஸ் நிறுவனம் முடிவெடுத்த நிலையில் உத்தரப் பிரதேச அமைச்சரவையும் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து சுற்றுலாத் துறை அமைச்சர் ஜெய்வீர் சிங் கூறுகையில், அருங்காட்சியகம் அமைக்க வழங்கப்பட்ட இடம் 90 ஆண்டுகளுக்கான குத்தகை தொகை 1 ரூபாக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம் சர்வதேச தரத்தில் இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற கோயில்கள், அவற்றின் வரலாறு, கட்டடக்கலை பறைசாற்றும் வகையில் இருக்கும்.
முதலில், டாடா சன்ஸ் நிறுவனம் இந்தத் திட்டம் குறித்து மத்திய அரசிடம் முன்மொழிந்துள்ளது. பின்னர் முதல் யோகி ஆதித்யநாத்தின் உத்தரவில், அமைச்சரவையின் ஒப்புதலோடு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த யோசனை கடந்தாண்டு முன்வைக்கப்பட்டது. முதல்வரும் உயர் அதிகாரிகளும் இந்தத் திட்டம் குறித்து பிரதமர் மோடி விளக்கமளித்துள்ளனர். பிரதமருக்கும் இந்த திட்டம் பிடித்துள்ளது. அருங்காட்சியகத்தில் ஒளி-ஒலி காட்சிக்கான அமைப்பும் ஏற்படுத்தவுள்ளது.
இது தவிர, ரூ.100 கோடி செலவில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கான டாடா சன்ஸ் நிறுவனத்தின் மற்றொரு முன்மொழிவுக்கும் உத்தரப் பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
செயலற்ற நிலையில் உள்ள பாரம்பரியக் கட்டிடங்களை சுற்றுலாத் தலங்களாக மேம்படுத்துவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுபோன்ற மூன்று பாரம்பரிய கட்டிடங்கள் லக்னௌவில் உள்ள கோத்தி ரோஷன் துல்ஹா, மதுராவில் உள்ள பர்சானா ஜல் மஹால் மற்றும் கான்பூரில் உள்ள சுக்லா தலாப் ஆகியவையும் சுற்றுலா தலங்களாக மேம்பாடு செய்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன” என்றார்.
டாடா சன்ஸ் என்பது டாடா நிறுவனங்களின் முதன்மை முதலீட்டு நிறுவனமாகும். அமைச்சரவைக் கூட்டத்தின் போது அங்கீகரிக்கப்பட்ட பிற திட்டங்களில் ஹெலிகாப்டர் சேவைகளை லக்னௌ, பிரயாக்ராஜ் மற்றும் கபில்வஸ்துவில் ஹெலிபேடுகளை உருவாக்குவது போன்ற திட்டங்களும் அடங்கியுள்ளன.