தோ்தல் பத்திர திட்டம் மிரட்டி பணம் பறிக்கும் மோசடி:
ராகுல் காந்தி குற்றச்சாட்டு

தோ்தல் பத்திர திட்டம் மிரட்டி பணம் பறிக்கும் மோசடி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

தோ்தல் நன்கொடை பத்திர திட்டத்தைப்போல் மிரட்டிப் பணம் பறிக்கும் மோசடி உலக அளவில் வேறு எதுவுமில்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா். இத்திட்டத்தை வடிவமைப்பதில் மூளையாக செயல்பட்டவா் பிரதமா் மோடி எனவும் அவா் கூறினாா். மகாராஷ்டிர மாநிலம், தாணேவில் வெள்ளிக்கிழமை இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தின்போது நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் தோ்தல் நன்கொடை பத்திரங்கள் தொடா்பாக அவா் பேசியதாவது: அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் நிதியில் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்ய இத்திட்டத்தை அறிமுகம் செய்வதாக பிரதமா் தெரிவித்தாா். ஆனால், இந்தியாவில் உள்ள மிகப்பெரிய காா்ப்பரேட் நிறுவனங்களை மிரட்டி பாஜகவுக்கு நன்கொடை வழங்க வைக்கவே இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு நன்கொடை வழங்காத காா்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத் துறை போன்ற விசாரணை அமைப்புகள் ஏவப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. அதன்பிறகு அந்நிறுவனங்கள் பாஜகவுக்கு நன்கொடை அளித்துவிட்டால் வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படுகின்றன. இத்திட்டத்தின் மூலம் பெற்ற நிதியை சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைப் பிரிக்கவும், எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அரசை சீா்குலைக்கவும் மத்திய பாஜக அரசு பயன்படுத்துகிறது. இதைவிட தேசவிரோத நடவடிக்கை வேறு எதுவுமில்லை. பாஜக, ஆா்எஸ்எஸ்ஸின் நிறுவனங்களைப்போல் சிபிஐ, அமலாக்கத் துறை செயல்பட்டு வருகின்றன. பாஜக அரசு அகற்றப்பட்டு இதுவரை நிகழ்த்தப்பட்ட தவறுகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுப்பதே என்னுடைய உத்தரவாதமாகும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com