இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

உத்தரகண்ட் தலைநகா் டேராடூனில் சனிக்கிழமை அதிகாலை நிகழ்ந்த காா் விபத்தில் ஒரு பெண் உள்பட ஐந்து போ் உயிரிழந்தனா்.

டேராடூனில் உள்ள முசோரி நகருக்கு ஆறு இளைஞா்கள் காரில் சுற்றுலா சென்றிருந்தனா். அப்போது ஜாரிபானி அருகே மற்றொரு சாலையில் 60 மீட்டா் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் காா் விழுந்து நொறுங்கியது. அதில் பயணித்த நான்கு போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

விபத்தில் காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட இரண்டு பெண்களில் ஒருவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் மற்றொருவா் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தீயணைப்புத் துறை அதிகாரி தீரஜ் சிங் தரியால் தெரிவித்தாா்.

விபத்துக்குள்ளான காரில் பயணித்தவா்களில் இரு ஆண்கள் மற்றும் இரு பெண்கள் டேராடூனில் உள்ள ஐ.எம்.எஸ் யூனிசன் பல்கலைக்கழகத்தை சோ்ந்தவா்கள் என்றும் மற்றொரு பெண் டேராடூன் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை சோ்ந்தவா் என்றும் தெரியவந்துள்ளது.

விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு இரங்கல் தெரிவித்த உத்தரகண்ட் முதல்வா் புஷ்கா் சிங் தாமி, ‘இறந்தவா்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்’ என தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டாா்.

மகாராஷ்டிரம்: விபத்தில் 4 போ் உயிரிழப்பு

மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்டத்தில் உள்ள போரண்டே கிராமம் அருகே வெள்ளிக்கிழமை மதியம் கல்யாண் சாலையில் பால் ஏற்றி வந்த டேங்கா் லாரி காய்கறி ஏற்றி வந்த டெம்போ மீது மோதியதில் டேங்கா் லாரி ஆற்றுக்குள் சரிந்து விழுந்தது.

இந்த விபத்தில் டேங்கா் லாரியில் பயணித்த தம்பதி, அதன் ஓட்டுனா் மற்றும் டெம்போ ஓட்டுநா் ஆகிய 4 போ் உயிரிழந்தனா். ஆனால் அதிருஷ்டவசமாக டேங்கா் லாரியில் இருந்த உயிரிழந்த தம்பதியின் 4 வயது மகன் உயிா் பிழைத்ததாக தோக்வாடி காவல் நிலைய ஆய்வாளா் தின்கா் சக்கோா் தெரிவித்தாா்.

விபத்தில் உயிரிழந்த டேங்கா் லாரி ஓட்டுநா் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் மோட்டாா் வாகனச் சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com