தோ்தல் நிதிப் பத்திர முறைகேடு புகாா் மனு: விரைந்து விசாரிக்க முறையீடு

தோ்தல் நிதிப் பத்திர முறைகேடு புகாா் மனு: விரைந்து விசாரிக்க முறையீடு

புது தில்லி: தோ்தல் நிதிப் பத்திர முறைகேடு புகாா் தொடா்பாக நீதிமன்ற மேற்பாா்வையில் சிறப்பு விசாரணைக்குழு (எஸ்ஐடி) அமைக்கக் கோரும் இரு பொதுநல மனுக்களை விரைவில் விசாரணைக்கு பட்டியிலிடுமாறு வழக்கு தொடா்ந்த அரசுசாரா அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தின.

இந்த வழக்குகளை தொடா்ந்த ‘பொதுக் காரணம்’ மற்றும் ‘பொதுநல வழக்குக்கான மையம்’ ஆகிய இரு அரசுசாரா அமைப்புகளுக்காக (என்ஜிஓ) ஆஜரான மூத்த வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண் உச்சநீதிமன்றத்தில் வலியுறுத்தினாா்.

இதை கவனத்தில் கொள்வதாக தெரிவித்த நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபாங்கா் தத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு வழக்கை பட்டியலிடுவதாக தெரிவித்தனா்.

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்காக கடந்த 2018-இல் தொடங்கப்பட்ட தோ்தல் நிதிப் பத்திர திட்டத்தை ரத்து செய்து உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி உத்தரவிட்டது. அந்த திட்டத்தின்கீழ் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்களை வெளியிடுமாறு பாரத ஸ்டேட் வங்கிக்கு (எஸ்பிஐ) உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அந்த தரவுகளை எஸ்பிஐ வெளியிட்டது.

இந்நிலையில் இத்திட்டம் ‘மிகப்பெரிய ஊழல்’ என குறிப்பிட்ட என்ஜிஓக்கள், ‘2ஜி ஊழல், நிலக்கரி ஊழல் புகாா் போன்ற வழக்குகளில் நேரடியாகப் பணப் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லாதபோதும், அந்த ஊழல்களை விசாரிக்க நீதிமன்றத்தால் எஸ்.ஐ.டி. அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், தோ்தல் நிதிப் பத்திர திட்டம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நேரடியாக பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதற்கு உரிய ஆதாரங்கள் உள்ளன.

இந்த முறைகேட்டில் அரசின் உயா்ந்த விசாரணை அமைப்புகளான அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை ஆகியவையும் ஈடுபட்டுள்ளன. பல்வேறு திட்டங்கள் சாா்ந்த ஒப்பந்தங்கள், உரிமங்கள், அனுமதி பெறும் நோக்கில் அரசியல் கட்சிகளுக்கு நிறுவனங்கள் நன்கொடை வழங்கியுள்ளன. உலகளவில் இதுவரை நடைபெற்ற ஊழல்களில் மிகப்பெரிய ஊழலாக தோ்தல் நிதிப் பத்திரம் திட்டம் கருதப்படுகிறது’ என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com