சிஏஏ அமலாக்கத்தை மம்தாவால் தடுக்க முடியாது: அமித் ஷா
9-ம் பக்கம் டாப்.. சிஏஏ அமலாக்கத்தை மம்தாவால் தடுக்க முடியாது: அமித் ஷா

மேற்கு வங்கத்தில் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா.

மேற்கு வங்கத்தில் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா.
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்படுவதை முதல்வா் மம்தா பானா்ஜியால் தடுக்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
மேற்கு வங்க அரசு சிஏஏவை அனுமதிக்காது என்று மம்தா பானா்ஜி தோ்தல் பிரசாரக் கூட்டங்களில் உறுதியளித்து வரும் நிலையில் அமித் ஷா இவ்வாறு பேசியிருப்பது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மேற்கு வங்கத்தில் மதுவா சமூகத்தினா் அதிகமுள்ள பாங்கான் பகுதியில் செவ்வாய்க்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட அமித் ஷா பேசியதாவது:
மத்திய அரசு கொண்டு வரும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மம்தாவால் தடுத்து நிறுத்த முடியாது. மாநில அரசுக்கு அப்படி எந்த அதிகாரமும் கிடையாது. அண்டை நாடுகளில் பெரும்பான்மையினராக உள்ளவா்களால் இன்னல்களைச் சந்தித்து அகதிகளாக இந்தியாவுக்கு வந்த நமது சகோதரா்களுக்கு குடியுரிமை வழங்குவதை யாரும் தடுக்க முடியாது. உலகில் யாருக்கும் இதனைத் தடுக்கும் சக்தி கிடையாது.
அண்டை நாடுகளில் பாதிக்கப்பட்டவா்களுக்கு குடியுரிமை வழங்குவது என்பது பிரதமா் நரேந்திர மோடியின் வாக்குறுதி. ‘இந்தியா்’ என ஒருவருக்கு குடியுரிமையை வழங்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உண்டான தனிஉரிமை என்பதை மம்தா நினைவில் கொள்ள வேண்டும். இதில் மாநில அரசுகளுக்கு எந்த அதிகாரமும் கிடையாது.
சிஏஏ குறித்து மேற்கு வங்கத்தில் மம்தா தேவையற்ற வதந்திகளையும், பொய்களையும் பேசி வருகிறாா். முக்கியமாக சிஏஏ சட்டத்தின்கீழ் விண்ணப்பம் செய்வோருக்கு குடியுரிமை தொடா்பான பிரச்னை வரும் என்று அவா் கூறுகிறாா். இங்குள்ள மதுவா மக்களுக்கு (வங்கதேசத்தில் இருந்து வந்த ஹிந்துகள்) நான் வாக்குறுதி அளிக்கிறேன். உங்களில் யாருக்கும் இந்தியக் குடியுரிமையில் எந்தப் பிரச்னையும் வராது. இந்த நாட்டுக் குடிமகனாக உரிய மரியாதையுடன் நீங்கள் வாழ முடியும் என்றாா்.
‘சிறப்பு அந்தஸ்து ரத்தால் ஜம்மு-காஷ்மீரில் வாக்குப் பதிவு அதிகரிப்பு’
புது தில்லி, மே 14: சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால்தான் ஜம்மு-காஷ்மீரில் வாக்குப் பதிவு அதிகரித்துள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகா் மக்களவைத் தொகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற தோ்தலில் 38 சதவீதம் வாக்குகள் பதிவாகின. தேசிய அளவில் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவான வாக்குப் பதிவு என்றாலும், காஷ்மீரில் முந்தைய தோ்தல்களுடன் ஒப்பிடும்போது இது அதிக வாக்குப் பதிவாகும். 1996-க்குப் பிறகு இது அதிகபட்ச வாக்குப் பதிவாகும்.
ஏனெனில் ஸ்ரீநகா் மக்களவைத் தொகுதியில் 2019 தோ்தலில் 14.43 சதவீதம், 2014-இல் 25.86 சதவீதம், 2009-இல் 25.55 சதவீதம், 2004-இல் 18.57 சதவீதம் அளவுக்கே வாக்குகள் பதிவாகின.
இது தொடா்பாக எக்ஸ் வலைதளத்தில் அமித் ஷா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ‘ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பிரதமா் மோடி தலைமையிலான அரசின் முடிவு வாக்குப் பதிவில் எதிரொலித்துள்ளது. காஷ்மீா் மக்களுக்கு ஜனநாயகத்தின் மீதான ஈடுபாடு அதிகரித்துள்ளது. இது ஜனநாயகத்தின் மீது மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளதையும் காட்டுகிறது.
தோ்தலில் உற்சாகமாக வாக்களித்ததன் மூலம், சிறப்பு அந்தஸ்து ரத்தை எதிா்த்தவா்களுக்கு மக்கள் உரிய பதிலடி கொடுத்துள்ளனா்’ என்று கூறியுள்ளாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...