
மிக உயரிய சிகரங்களில் ஒன்றான எவரெஸ்ட் ஏறுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் கடுமையான போக்குவரத்து சிக்கல் இமய மலையில் நிலவுவதாக மலையேற்ற ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
மார்ச் முதல் மே மாத வரையிலான காலம் இமயமலையில் ஏறுவதற்கு சிறந்த பருவமாக கருதப்படுகிறது. இந்த பருவத்தில் ஏராளமான பேர் பனிமலைகளுக்கு ஊடாக ஏறுவதற்கு ஆர்வம் காட்டி வருவதால் எப்போதையும் விட அதிக நெரிசம் ஏற்பட்டுள்ளது.
நூற்றுக்கணக்கான பேர் வரிசையில் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் காத்து நிற்கிற விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
கடந்த வாரம் பிரிட்டனை சேர்ந்த டேனியல் பட்டேர்சன் மற்றும் அவரது வழிகாட்டி நேபாளத்தை சேர்ந்த பாஸ் தெஞ்சி செர்பா ஆகியோர் காணாமல் போகினர். ஒன்றாக பயணித்த 15 பேர் கொண்ட குழுவில் சென்ற இவர்கள் சிகரத்தை அடைந்துள்ளனர்.
பின்னர் அங்கிருந்து இறங்க முற்பட்டபோது இருவரும் ஹிலாரி முனையில் இருந்து தவறியிருக்கலாம் என கருதப்படுகிறது. இவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
மே 19-ம் தேதி எவரெஸ்ட் சிகரத்தைத் ஏறி திரும்பியுள்ள ராஜன் த்விவேதி என்பவர் பதிவிட்டுள்ள விடியோவில் நூற்றுக்கணக்கான பேர் பனி மலையில் வரிசையாக நிற்பது தெரிகிறது.
அவர் அந்த விடியோவில், “இமயமலை ஏறுவது ஒன்றும் எளிதான விஷயமல்ல. உறையவைக்கும் குளிர் நிலவும் பகுதி. அனுபவம் இல்லாதவர்கள், புதியவர்கள் உலகம் முழுவதும் இருந்து ஏறுகின்றனர். அவர்களில் 250-300 பேர் மட்டுமே வெற்றி பெறுகின்றனர். ஏராளமானவர்கள் குளிர் சார்ந்த நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்” என தெரிவித்துள்ளார்.
இத்தனை பேர் மலையேறுவதால் இமயமலையின் சூழலியல் பாதிக்கப்படுவதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பருவம் தொடங்கியதுமுதல் இதுவரை 5 பேர் பலியாகியுள்ளதாகவும் 3 பேர் காயமுற்றதாகவும் நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே பருவத்தில் பலி எண்ணிக்கை 18 என ஹிமாலிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.