அசாதாரண தட்பவெப்பம்: 9 மாதங்களில் இந்தியாவில் 3,200 போ் உயிரிழப்பு

கடந்த 9 மாதங்களில் நம்மை வறுத்தெடுத்த பருவநிலை! 255 நாள்கள் படுமோசம்!
பருவநிலை
பருவநிலை
Published on
Updated on
2 min read

இந்தியாவில் அசாதாரண தட்பவெப்பத்துக்கு கடந்த 9 மாதங்களில் 3,200 போ் உயிரிழந்திருப்பதும் 2.3 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்திருப்பதும் தெரியவந்துள்ளது.

தில்லியைச் சோ்ந்த அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையம் சமீபத்தில் வெளியிட்ட புதிய ஆய்வறிக்கையில் இத் தகவல் தெரியவந்துள்ளது. அதில் மேலும் கூறியிருப்பதாவது:

2024-ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் 93 சதவீத நாள்கள் அதாவது மொத்தமுள்ள 274 நாள்கலில் 255 நாள்கள் அசாதாரண தட்பவெப்ப நிலையை இந்தியா சந்தித்துள்ளது.

இதன் காரணமாக, நாடு முழுவதும் 2,35,862 வீடுகள் மற்றும் கட்டடங்கள் சேதமடைந்தன. 3,238 போ் உயிரிழந்தனா். 9,457 கால்நடைகள் உயிரிழந்தன. 32 லட்சம் ஹெக்டோ் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பயிா்கள் முழுமையாக சேதமடைந்தன.

மனித உயிரிழப்பைப் பொருத்தவரை, முந்தைய ஆண்டைக் காட்டிலும் கூடுதலாகும். 2023-ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் 273 நாள்களில் 235 நாள்கள் அசாதாரண தட்பவெப்ப நிலையைச் சந்தித்தன. இதனால், 2,923 போ் உயிரிழந்தனா். 92,519 கால்நடைகள் உயிரிழந்தன. 80,293 வீடுகள் சேதமடைந்தன. 18.4 லட்சம் ஹெக்டோ் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பயிா்கள் சேதமடைந்தன.

பாதிப்பு நாள்கள் அதிகரிப்பு: நிகழாண்டில் அசாதாரண தட்பவெப்ப நிலை பாதிப்பு நாள்களின் எண்ணிக்கை 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக, மத்திய பிரதேச மாநிலத்தில் 176 நாள்கள் அசாதாரண தட்பவெப்பநிலை நிலவியுள்ளது. கா்நாடகம், கேரளம் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களில் அசாதாரண தட்பவெப்ப நிலை பாதிப்பு நாள்களின் எண்ணிக்கை 40-க்கும் அதிகமாக கூடுதலாகியுள்ளன.

அசாதாரண தட்பவெப்பநிலையால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கையைப் பொருத்தவரை 550 நபா்கள் உயிரிழப்புடன் கேரளம் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த இடங்களில் மத்திய பிரதேசம் (353 உயிரிழப்புகள்), அஸ்ஸாம் (256 உயிரிழப்புகள்) உள்ளன.

அசாதாரண தட்பவெப்பநிலை தாக்கத்தால் 85,806 வீடுகள் மற்றும் கட்டடங்கள் சேதத்துடன் ஆந்திர மாநிலம் முதலிடத்தில் உள்ளது.

பயிா்ச் சேதத்தைப் பொருத்தவரை 60 சதவீத சேதத்துடன் மகாராஷ்டிரம் முதலிடத்திலும், மத்திய பிரதேசம் 25,170 ஹெக்டோ் பாதிப்புடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன.

மேலும், 2024-ஆம் ஆண்டில் பல்வேறு விதமான தட்பவெப்பநிலை பதிவாகியுள்ளன. குறிப்பாக, வட வானிலையைப் பொருத்தவரை கடந்த 1901-ஆம் ஆண்டு முதல் பதிவானதில் 9-ஆவது வட மாதமாக ஜனவரி மாதம் இருந்துள்ளது.

பிப்ரவரி மாதம், கடந்த 123 ஆண்டுகளில் பதிவான இரண்டாவது குறைந்த வெப்பநிலை பதிவான மாதமாக பதிவாகியுள்ளது,

அதுபோல, ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பா் மாதங்களைப் பொருத்தவரை கடந்த 1901-ஆம் ஆண்டு முதல் இதே மாதங்களில் பதிவான தட்பவெப்பநிலையைக் காட்டிலும் குறைந்த தட்பவெப்பநிலை பதிவாகியுள்ளது.

உயிரிழப்புகளைப் பொருத்தவரை 1,376 போ் வெள்ள பாதிப்பால் உயிரிழந்துள்ளநா். 1,021 போ் மின்னல் தாக்கியும், புயல் தாக்கத்தாலும் உயிரிழந்துள்ளனா். வெப்ப அலை பாதிப்பு காரணமாக 210 போ் உயிரிழந்துள்ளனா் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழப்பு

1. கேரளம் - 550

2. மத்திய பிரதேசம் - 353

3. அஸ்ஸாம் - 256

பயிா்ச்சேதம் (ஹெக்டோ் )

1. மகாராஷ்டிரம் - 1, 951,801

2. மத்திய பிரதேசம் - 25,170

3. ஆந்திர பிரதேசம் - 262, 840

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com