ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

கௌரி லங்கேஷ் கொலைக் குற்றவாளிகளுக்கு ஹிந்துத்துவ அமைப்புகள் மாலை அணிவித்து மரியாதை!

கௌரி லங்கேஷ் கொலைக் குற்றவாளிகள் ஜாமீனில் விடுதலை - உற்சாக வரவேற்பு!

News image
- படம் | தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
Updated On :13 அக்டோபர் 2024, 12:08 pm

DIN

பெண் பத்திரிகையாளரும், சமூக ஆர்வலருமான கௌரி லங்கேஷை, பெங்களூரு ராஜராஜேஷ்வரிநகர் பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டின் வெளியே வைத்து, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கடந்த 2017-ஆம் ஆண்டு செப்.5-ஆம் தேதி இரவு இந்த கொடூர கொலை நிகழ்ந்தது.

இந்த நிலையில், கர்நாடகத்தில் அப்போதைய ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ், சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை வழக்கு விசாரணையை முடுக்கிவிட்டது. வழக்கு விசாரணையில், கௌரி லங்கேஷ் கொலையில் தொடர்புடையதாக மொத்தம் 18 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு, இருசக்கர வாகனத்தில் சென்று கௌரி லங்கேஷை சுட்டுகொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பரசுராம் வாக்மோர் தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட கௌரி லங்கேஷ்

படுகொலை செய்யப்பட்ட கௌரி லங்கேஷ்

கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பரசுராம் வாக்மோர் மற்றும் மனோஹர் யாதவே ஆகிய இருவருக்கும் கடந்த 9-ஆம் தேதி ஜாமீன் வழங்கி பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து கடந்த 11-ஆம் தேதி அவர்கள் இருவரும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில், விஜயபூராவில் அமைந்துள்ள காளிகாதேவி கோயிலுக்குச் சென்று அவர்கள் இருவரும் வழிபாடு நடத்தினர். அப்போது அவர்கள் இருவருக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட சம்பவம் சமூகத்தில் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஹிந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த உமேஷ் வண்டால், குற்றவாளிகள் இருவருக்கும் மாலை அணிவித்தும் பொன்னாடை போர்த்தியும் கௌரவித்தார். அப்போது அங்கே திரண்டிருந்த ஹிந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்தோர் ‘பாரத் மாதா கி ஜே’ என்றும், சநாதன தர்மத்தை ஆதரித்தும் முழக்கங்களை எழுப்பியதையும் காண முடிந்தது.

இதனிடையே, ஹிந்துத்துவ அமைப்பான ஸ்ரீராம் சேனையின் தலைவர் நீல்கந்தா கண்டாகல் குற்றவாளிகள் இருவரையும் குறிப்பிட்டு, “இந்த கொலைக்கும், தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள இருவருக்கும் எவ்வித தொடர்புமில்லை” என பகிரங்கமாகப் பேசியுள்ளார். எனினும், குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் ஊடகங்களை தவிர்த்ததையும் காண முடிந்தது.

கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 8 பேருக்கு கடந்த வாரம் பெங்களூரு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, லங்கேஷ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 4 பேருக்கு கடந்த மாதம் 4-ஆம் தேதி(செப்.4) கர்நாடக உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம், கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு கைதாகியுள்ள மொத்தம் 18 பேரில், தற்போது 16 குற்றவாளிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.