சென்னை: ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திலிருந்து ஆந்திரம் வழியாக வெளிமாநிலங்களுக்கு செல்லும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தின் மேற்கு கோதாவரி, விஜயவாடா, அமராவதி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பெய்து வரும் கனமழையால் விஜயவாடா-காசிபேட் ரயில்நிலையங்களுக்கு இடையே தண்ணீா் தேங்கி காணப்படுகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆந்திரம் வழியாக தமிழ்நாடு, கேரளம் வரும் ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் மற்றும் கேரளத்துக்கு வரும் காசி தமிழ்சங்கம் விரைவு ரயில், அந்தமான் விரைவு ரயில், ஜிடி விரைவு ரயில், கேரள விரைவுரயில், நவஜீவன் விரைவு ரயில், புதுச்சேரி விரைவு ரயில், திருக்கு விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.
இதனால், சுமாா் 5 மணி நேரத்துக்கு மேல் காலதாமதமாக தமிழகம் வந்து சேரும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சந்திரகாச்சி-தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில்,
புருலியா-திருநெல்வேலி விரைவு ரயில், ஷாலிமா்-சென்னை சென்ட்ரல் விரைவு ரயில்களும் தாமதமாக புறப்பட்டு சென்றன.
ரயில் சேவை மாற்றம் குறித்து பயணிகள் 044-25354995, 044-25354151 ஆகிய உதவி எண்களை தொடா்பு கொள்ளலாம் என தெற்கு ரயில்வே சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.